Thursday, 17 April 2008

ஜே.வி.பி.க்குள் உட்கட்சி மோதல் கட்சி மூன்றாகப் பிளவுபடுமளவுக்கு பிரச்சினைகள்

சுனில் ஹந்துநெத்தி அரசு பக்கம் தாவுகிறார்?

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் உட்கட்சிப்பூசல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகியுள்ளது. கட்சி மூன்றாகப் பிளவுபடுமளவுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டமைக்காக ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவை கட்சியின் உறுப்புரிமை உட்பட சகல பதவி நிலைகளிலுமிருந்து இடைநிறுத்திய ஜே.வி.பி. மத்திய குழு அவருக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மத்திய குழுவுக்கு பதிலளிக்குமாறு கேட்டிருந்தது.

விமல் வீரவன்ச கட்சிக்குப் பதிலளிக்காமல் பாராளுமன்றத்தில் கட்சியை விமர்சித்து அறிக்கை விடுத்ததையடுத்து நீண்டகாலமாக இருந்துவந்த உட்பூசல் பகிரங்கத்துக்கு வந்தது.

இதனையடுத்தே ஜே.வி.பி. தலைவர் கட்சிக்குள் நடந்தவற்றை வெளியே கொண்டு வந்து விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி பதிலளிக்கும் வரை கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இதனையடுத்து ஜே.வி.பி. இரண்டு அணிகளாக பிரிந்துவிட்டது. சோமவன்ஸ அமரசிங்க தலைமையிலான அணி எதிரணியிலும் விமல் வீரவன்ச தலைமையிலான அணி அரச ஆதரவு தனி அணியாகவும் இயங்கத் தொடங்கின.

இந்த நிலைமையில் கட்சி உடைவதை விரும்பாத சிலர் இவர்களை ஒன்றுபடுத்த எடுத்த முயற்சிகள் ஆரம்பத்திலேயே குழம்பிப்போனது. கட்சி மத்தியகுழு விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியதையடுத்து சோமவன்ஸவும் மற்றும் சிலரும் கட்சியை அழிக்க சதி செய்வதாகவும், தன்னை வெளியேற்றுவதே முதற் பணியெனவும் விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

விமல் வீரவன்சவுடன் பேச்சு நடத்த சிலர் மேற்கொண்ட முயற்சியை முற்றாக நிராகரித்த ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து தான் நிரபராதி என்பதை நிரூபித்தால் மட்டுமே அடுத்த கட்டமாக விமல் வீரவன்சவுடன் பேச முடியுமென உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.

விமல் வீரவன்சவுடன் இணைந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கட்சியின் மத்திய குழுவை சோமவன்ஸ அமரசிங்க தன்னிச்சைப்படி வழிநடத்த முற்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். விமல் வீரவன்ச விடயத்தில் கட்சி உயர்பீடம் நேர்மையுடன் நடந்து கொள்ளத் தவறினால் கட்சி முற்றுமுழுதாக சீர்குலையலாமெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்சியில் உள்ள சதிகாரர்கள் வெளியேற்றப்படாதவரை கட்சியை பாதுகாக்க முடியாது போகுமெனவும் அந்த எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இரண்டு அணிகளாக ஜே.வி.பி. பிளவுபட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும் முரண்பட்டு அரசுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது.

ஏற்கனவே ஹந்துநெத்தி கட்சியிலிருந்து வெளியேற முயன்றபோது அவர் ஜே.வி.பி.யினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சோமவன்ஸ அமரசிங்க, விமல் வீரவன்ச ஆகியோர் இணைந்தே தம்மை சிறைப்படுத்தி வைத்திருந்ததாக சுனில் ஹந்துநெத்தி பாராளுமன்றத்தில் ஐ.தே.க.விலிருந்து அரசுபக்கம் தாவி அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த எம்.பி. ஆளும் தரப்புப்பக்கம் மாறும்போதே சுனில் ஹந்துநெத்தியும் அரசு பக்கம் தாவவிருந்ததாக அந்த அமைச்சரே குட்டை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த நிலைமையில் ஜே.வி.பி. யால் நாட்டு மக்களுக்கு இனிமேல் எந்த நன்மையும் செய்ய முடியாதெனக் கூறியிருக்கும் சுனில் ஹந்துநெத்தி ஐக்கிய தேசியக் கட்சியை விட நாட்டுக்கு பயன்தரக் கூடிய சேவையாற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த கருத்துத் தெரிவிக்கையில் யார் கட்சியிலிருந்து வெளியேறினாலும் கட்சியை அழித்து விட முடியாதெனவும் ரோஹண விஜேவீர காலம் முதலே கட்சிக்குள் சதிசெய்து துரோகமிழைத்தோர் காணப்பட்டதாகவும் இன்று அவர்கள் முகவரியற்றுப் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சிக்குத் துரோகமிழைப்போர் வெளியேற்றப்பட்டபின்னர் கட்சியை மீண்டும் பலம் கொண்டதாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் லால் காந்த குறிப்பிட்டார்.

thank you:thinakkuarl

No comments: