ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையில் கன்னடர்களை கண்டித்து தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி ஆவேசமாக பேசினார். இத்திட்டத்தை எதிர்க்கும் கர்நாடக அமைப்புகளை கடுமையாக சாடிய அவர் வன்முறையில் ஈடுபடுவோரை உதைக்க வேண்டாமா? என்றும் பேசி ஆத்திரப்பட்டார்.
ரஜினி பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் முதல்-அமைச்சர் குமாரசாமி, நடிகை ஜெயமாலா போன்றோர் கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். ஆனால் வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்களை ஏவி ரஜினிக்கு எதிரான போராட்டத்தை தூண்டினார்.
ரஜினியின் போட்டோக்களை அவமரியாதை செய்து ஆத்திரத்தை தீர்த்தனர். ரஜினிக்கு எதிரான போராட்டம் தீவிர மாவதையடுத்து பதிலடி கொடுக்க கர்நாடக ரஜினி ரசிகர் மன்றத்தினர் களத்தில் குதித்தனர். அங்குள்ள மாநில ரசிகர் மன்ற தலைவராக சந்திர காந்த் என்பவர் பொறுப்பு வகிக்கிறார். இவர் ரஜினியின் அண்ணன் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர் மன்றத்தின் மாநில செயலாளராக வெங்கடேஷ் உள்ளார்.
இருவரும் கர்நாடகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை திரட்டி வாட்டாள் நாகராஜூக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட தயாரானார்கள். பெங்களூர் தமிழ் சங்கத்துக்கும் சென்று ஆதரவு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தகவலை கர்நாடக ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சந்திரகாந்த் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- வாட்டாள் நாகராஜ் எங்களுக்கு பொருட்டே இல்லை. தேர்தலை மனதில் வைத்து அவர் கலவரம் செய்கிறார். ரஜினி எங்களுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது நீங்களாக எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவரை நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். எனவே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டோ ம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment