Friday, 11 April 2008

பாதுகாப்பு ஆலோசனைகளை கடைப்பிடிக்குமாறு அரச முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!!!!!!

பிரதியமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அவ்வாறே கடைப்பிடிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார். நாட்டின் எந்தப்பகுதியாக இருந்தாலும் பிரசித்தமாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில்

பங்குபற்றும் போது பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை அலட்சியம் செய்யவேண்டாம் என்றும் முடிந்தளவு அந்த ஆலோசனைகளை பின்பற்றுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்களதமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படுகின்ற பிரச்சித்தமான நிகழ்வுகளில் பங்குபற்றும் போது பாதுகாப்பு ஆலோசனைகளை அவ்வாறே கடைப்பிடிப்பதுடன் குறிப்பாக அமைச்சர்கள் பிரதியமைச்சர்களின் பயணங்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட ஏற்பாடுகளை மீறி செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது செயற்படுவது பயங்கரவாதிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகொடுக்கும் நடவடிக்கையாகும்.பயங்கரவாத்தை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் பயங்கரவாதிகளுக்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயற்படவேண்டாம் என்றும் அரசதரப்பு முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்தரப்பு பாராளுமன்ற குழு மற்றும் அரசதரப்பு முக்கியஸ்தர்களுடன் அலரிமாளிகையில் நடத்திய சந்திப்பொன்றின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நாட்டினதும் அரசியல் தலைவர்களினதும் மற்றும் மக்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலமாக பயங்கவாதிகளின் நோக்கத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகொடுப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை சிங்களதமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக தலைநகரம் உள்ளிட்ட பிரதான நகரங்கள் மற்றும் பஸ்தரிப்பு நிலையங்களின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தலைநகரம் உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஆயுதம் தரித்த படையினர் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தலைநகரத்திலிருந்து சொந்த இடங்களுக்கு செல்கின்ற பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களில் சிவில் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தலைநகரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்கின்ற பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் பயணிகளும், பயணம்பொதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே பயணத்தை தொடர்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் கொள்ளையர்கள் மட்டும் முடிச்சுமாற்றிகளை கைதுசெய்வதற்காகவும் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் குறித்து கண்காணிப்பதற்காகவும் பாதுகாப்பு தரப்பினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூரஇடங்களுக்கு பயணம் செய்வோர் மற்றும் தூர இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு வருகைதருகின்றவர்கள் அருகிலிருக்கின்ற நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான பொதிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்

No comments: