Friday, 11 April 2008

எதிர்பார்க்கப்படும் அதிரடி சரவெடிகள்!!

2007ஆம் ஆண்டினைப் போல இல்லாமல் 2008ஆம் ஆண்டின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள் வணிகரீதியாக பெரும் வெற்றியடையாத நிலையில் கோடை விடுமுறைக்கும் பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகவில்லை. அஞ்சாதே, சாதுமிரண்டா உட்பட சில படங்கள் எதிர்பாராத பெரிய அளவிலான வணிக வெற்றியை அடைந்திருக்கிறது என்பது மட்டுமே இந்த ஆண்டின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கும் ஆச்சரியம்.

ஆயினும் தயாரிப்பு நிலையிலும், தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கும் சில படங்களும் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டின் பிற்பாதியிலும், அடுத்த ஆண்டின் முற்பாதியிலும் வெளியாகவிருக்கும் அத்திரைப்படங்களில் சில குறித்த ஒரு பறவை பார்வையை பார்ப்போமா?


தசாவதாரம்

தமிழ் திரையுலகை சர்வதேச களத்துக்கு கொண்டுச் செல்லும் மைல்கல்லாக இத்திரைப்படம் அமையும் என்று திரையுலகினர் எல்லோருமே மகிழ்ச்சியாக பேசிக்கொள்கிறார்கள். உலகிலேயே பத்துவேடங்களில் முதன்முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு காலத்தை மூன்று மணி நேர சினிமாவாக பரபரப்பாக இயக்கியிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.


ரோபோ

சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயர் ஒன்றே போதும், இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிறவைக்க. சுஜாதாவின் கதையை ஷங்கர் இயக்குகிறார் என்றதுமே ஷ்யூர் ஹிட் என்பது உறுதி ஆகிவிட்டது. படம் எப்போது வருமோ தெரியாது, ஆனாலும் இப்படம் வெளியாகி வெற்றி பெறும் வரையில் இதுதான் டாக் ஆஃப் த வோர்ல்டு!


குசேலன்

ரோபோவுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அளிக்கும் இன்ப அதிர்ச்சி இந்த குசேலன். ரஜினி - வாசு கூட்டணியின் சந்திரமுகி சாதனைகளை குசேலன் மிஞ்சிவிடும் என்று தென்னிந்திய சினிமா வர்த்தகர்கள் இப்போதே பரபரப்பாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். வில்லனாக அறிமுகமாகி நல்ல நடிகராக, எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட கையாளும் திறன் கைவரப்பெற்ற பசுபதியின் திரையுலக வாழ்வில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும்.


குருவி

கில்லியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் - தரணி, போதாதற்கு விஜயின் வெற்றி ஜோடியான த்ரிஷா. மாண்புமிகு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரின் மகனான உதயநிதி தயாரிப்பாளர். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் 'குருவி' கோடிகளை கொட்டும் என்கிறார்கள்.

ஏ.வி.எம். விஜயை வைத்து எடுக்கும் படம், முரட்டுக்காளையின் ரீமேக்காக கூட இருக்கலாம் என்கிறார்கள். பிரபுதேவா விஜயை இயக்கப்போகும் இன்னொரு படம் ஆகியவற்றுக்கு இன்னமும் பெயர் கூட சூட்டப்படவில்லை. இருந்தும் இந்த இரண்டு படங்களும் கூட எதிர்பார்ப்பை பன்மடங்குக்கு கூட்டுகிறது.


ஏகன்

பிரபுதேவா இயக்குனராகிவிட்ட நிலையில் அவரது அண்ணன் ராஜூசுந்தரம் அஜித்குமாரை இயக்கும் திரைப்படம். பில்லா தந்த மாபெரும் வெற்றி உற்சாகத்தில் இருக்கும் அஜித்குமார், அடுத்த படத்தையும் பில்லாவை விட பிரம்மாண்ட வெற்றியாக தர இரவுப்பகலாக உழைத்து வருகிறார். ஹாலிவுட் பாணி சண்டைக்காட்சிகளுக்காக இப்படம் பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.


சென்னையில் ஒரு மழைக்காலம்

'தமிழில் ஆங்கிலப்படம் எடுக்கும் இயக்குனர்' என்ற அடைமொழி இயக்குனர் கவுதம் மேனனுக்கு கோலிவுட்டில் உண்டு. த்ரிஷாவுக்கு ரசிகர்மன்றங்கள் பெருகிவிட்ட நிலையில் அவருக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் படம் இது. மென்பொருள் துறையில் பணியாற்றும் இளைஞர்களை குறிவைத்து வருகிறது சென்னையில் ஒரு மழைக்காலம்.


சர்வம்

பில்லா படம் பல பேரை திரையுலகின் உச்சாணியில் ஏற்றியிருக்கிறது. பில்லாவுக்கு அடுத்ததாக ஆர்யா நடிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் 'சர்வம்' படத்துக்கான எதிர்பார்ப்பு இயக்குனரால் கிடைத்திருக்கிறது. ஆர்யாவுக்கு இது ஒரு 'ஸ்யூர் ஷார்ட் டெர்ம் ஹிட்' என்கிறார்கள்.


நான் கடவுள்

பாலா இயக்கும் நான் கடவுள் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் ஒரு சிற்பியின் லாவகத்துடன் பார்த்து பார்த்து செதுக்கும் இயக்குனர் பாலா. இலக்கிய ஜாம்பவான் ஜெயமோகன் வசனத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை நட்சத்திரங்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


என்றென்றும் ஆனந்தம்

மாதவன் நடிக்கும் படம் என்பதால் மட்டுமல்ல இப்படத்துக்கு எதிர்ப்பார்ப்பு. உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியும் அறிமுகமாகிறார் என்பதால் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், டோலிவுட் என்று இந்தியாவின் அத்தனை வுட்களும் இப்படத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்.

இப்படங்கள் மட்டுமல்லாமல் இன்னமும் ஏராளமான திரைப்படங்கள் பல சிறப்பம்சங்களோடு தயாராகி வருகிறது. தனுஷ் - வெற்றிமாறன் இணையும் புதிய படம் மீண்டும் ஒரு ‘பொல்லாதவன்' என்கிறார்கள். ஒரே நேரத்தில் திரையுலகில் நீண்ட அனுபவமுள்ள பத்து தயாரிப்பாளர்களை தயாரிக்க வைத்து பிரமிட் சாய்மீரா எடுக்கும் பத்து திரைப்படங்களும் கூட பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
thank you:phyramid saimira

No comments: