வைர வியாபாரியின் திருமணம் ஹெலிகாப்டரில் பறந்தபடி நடந்தது. நடுவானில் மணமகன், மணமகளை கரம் பிடித்தார்.
வைர வியாபாரி
சிக்பள்ளாபுரா மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா அல்லிபுரா கிராமத்தை சேர்ந்தவர் இர்பான் அலி (வயது 31). இவர் வைர வியாபாரி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மார்தான்தாஜ் (26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணத்தை அவர்களது பெற்றோர் மிகவும் ஆடம்பரமாகவும் அதே சமயத்தில் வித்தியாசமாகவும் நடத்த விரும்பினர். அதன்படி, ஹெலிகாப்டரில் அவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
ஹெலிகாப்டரில் பறந்தபடி
அதற்காக கவுரிபிதனூர் அருகே உள்ள விவசாய காலி நிலத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மதகுரு தலைமையில் மணமக்களுக்கு முதல் கட்ட திருமண சடங்குகள் நடந்தன. பின்னர் மணமக்கள் ஹெலிகாப்டரில் உட்கார வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து வானில் பறந்தபடி ஹெலிகாப்டரில் இரண்டாம் கட்ட திருமணம் மத சம்பிரதாயப்படி மதகுரு பீர் அசரத் உசேன் தலைமையில் மணமகன் இர்பான் அலி, மணமகள் மார்தான் தாஜை திருமணம் செய்துவைத்தார்.
இந்த திருமண சடங்கின் போது ஹெலிகாப்டர் இரண்டு முறை வானில் வட்டமிட்டபடி சுற்றி வந்து பின்னர் தரை இறங்கியது. அதன்பிறகு மணமக்கள் தங்களது பெற்றோர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பெங்களூர் திரும்பினர்.
பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
ஹெலிகாப்டரில் நடந்த இந்த கோலாகல திருமணத்தை அந்தப் பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
மணமக்கள் முஸ்லிம் மதம் சியா வகுப்பை சேர்ந்தவர்கள். அந்த கிராமத்தில் பிறந்தவர் திருமணம் செய்து கொண்டால், கிராமத்தின் விதியின்படி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணையோ அல்லது இளைஞரையோ திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி, வைர வியாபாரி இர்பான் அலி, அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணான மார்தான் தாஜை திருமணம் செய்து கொண்டதை அந்த கிராமத்து மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
Tuesday, 15 April 2008
ஹெலிகாப்டரில் நடந்த வைர வியாபாரியின் திருமணம் நடுவானில் பறந்தபடி மணமகன், மணமகளை கரம் பிடித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment