சிவராமின் எழுத்துக்கள் தமிழர் நிலைப்பட்ட களநிலைவரங்களைக் காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்தெனினும், அந்த எழுத்துக்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. இக் கட்டத்தில் முக்கியமான வினாவினைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்தப் பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினாவாகும். அதற்கான பதில் மிகக் குறுகியது- வேறு ஒருவரும் இல்லை. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகிறது.
தர்மரட்ணம் சிவராம் மறைந்த பொழுது அவறைப் பற்றி ஆங்கில, சிங்கள தினசரிகளிலும் வாரப் பதிப்புகளிலும் வெளிவந்த அஞ்சலிகள் ஈழத்துத் தமிழ் உலகை பெருத்த ஆச்சரியத்துக்குள் தள்ளின. தன்னுடைய ஆங்கில எழுத்துகள் மூலம் எந்த அரசியல் நிலைபாடுகளுக்கெதிராக எழுதினானோ அந்த நிலைப்பாடு சார்ந்தவர்கள் அத்தனை பத்திரிகையாளர்களும் அவனது மானிடச் சிறப்பினையையும் கருத்து நேர்மையையும் எழுத்து வன்மையையும் வாய்விட்டு, மனம்விட்டு பாராட்டினர். அந்த புகழ்ச்சிகளைக் கண்ட, கேள்வியுற்ற அவனை தமது இரகசிய குரலில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த பலர் வாய்மூடி மௌனிகளாகியதும் எனக்குத் தெரியும்.
சிவராம் பருந்து போன்றவன், அவன் உயர உயர மேலே மேலே பறப்பவன். அதற்கான ஆற்றல் கொண்டவன். காகங்களுக்கு பருந்து மீது பொறாமை. பல தடைகளில் முதுகுக்கு பின்னால் "கரைதல்"களும் இருந்தன. ஆனால், தன் மறைவோடு ஜோதியாக மேற்கிளம்பிய அவன் தன் சிறப்புகளையும் ஆற்றல்களையும் யாவரும் உணரச் செய்தான்.
ஒரு வகையிற் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை நாம் மீள் கண்டு பிடிப்புச் செய்தோம்.
சிவராம் வாழ்ந்த பொழுது நாம் உணராதிருந்த ஒன்று அவனது 3 வருட காலத்து மறைவு பளிச்சென புகட்டியுள்ளது.
புதிய அதிகார மையங்கள் ஏற்பட்டதன் பின்னரும் இலங்கைத் தமிழர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல உண்மையில் இந்த பிரச்சினைகள் பல. உண்மையில் இலங்கை நிலைப்பட்ட, தென்னாசிய நிலைப்பாட்டில் ஆசிய நிலைபட்ட, ஐரோப்பிய நிலைபட்ட, அமெரிக்கா நிலைபட்ட அரசியற் சிக்கற்பாடுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முடியவுமில்லை. அவற்றை புரிந்து கொள்ளும் முறையில் எழுதக் கூடியவருமில்லை. மிஞ்சிப் போனால் தமிழர் பலங்களை ஒளிபாய்ச்சி காட்டும் விமர்சனங்கள் முன்னர் வருவதுண்டு. இப்பொழுது அதுவுமில்லை.
இதற்கும் மேலாக கடந்த சில மாதங்களுள் போரியல் நிலையே மாறியுள்ளது. படையினரின் நிலைப்பாடு மாத்திரமல்லாமல், கையாளப்படும் உத்திகளும், முறை வழிகளும் கூட மாறிவிட்டன. இவற்றினுடைய போரியல் விளக்கங்களை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம்.
இப்படியானவற்றை விளக்கும் திறன் சிவராமிடத்திலிருந்தது. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகின்றது.
இந்த பின்புலத்தில் சிந்திக்கும் பொழுதுதான் சிவராமென்ற சிந்தனையாளனின் முக்கியத்துவம் புலனாகின்றது. சிவராம், `தராக்கி' என்ற புனைப்பெயருடன் ஆங்கிலத்தில் 1970 களின் பிற்கூற்றில் எழுதத் தொடங்கினான். ஆங்கிலத்தில் இந்த இதழியல் எழுத்து முயற்சியினை தொடங்குவதற்கு முன்னர் அவன் புளொட் இயக்கத்தின் உயர் நிலை அங்கத்தவர்களின் ஒருவனாக இருந்தான். அந் நாட்களில் தாரகை என தனக்கு வைத்துக் கொண்ட பெயரையே ஆங்கிலத்திற்கு பயன்படுத்தத் தொடங்க அது தராக்கி என உச்சரிக்கப்படலாயிற்று.
1970களின் பிற்கூற்றின் 78 - 79 என நம்புகிறேன். இலங்கை முதன் முதலாக தீவிரவாத தமிழ் இளைஞர்களின் இயக்க ஆற்றல்களையும் அவற்றின் வழியாக வருகின்ற அரசியற் சாத்தியப்பாடுகளையும் முழு நிலையாக உணரத் தொடங்கிய காலமாகும். பாடசாலை பையன்களின் சிறு பிள்ளை விளையாட்டுத் தனம் என்ற வகையிலேயே அந்த எழுச்சியை ஜெ.ஆர். ஜயவர்த்தன முதல் ஜே.என். திக்ஷிட் வரை பலர் பார்த்த காலமது. அந்த காலகட்டத்திலேதான் "த ஜலன்ட்" பத்திரிகையில் ஞாயிறு வாரப் பதிப்புகளில் தமிழ் உரிமைப் போர் பற்றி, பிரதானமாக போரியல் பின்புலம் பற்றி தராக்கி எழுதத் தொடங்கியிருந்தான். அந் நாட்களில் மேர்வின் டி சில்வா அரசியற் செல்வாக்குமிக்க Lanka Guardian என்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். சிவராம் Lanka Guardian இல் இளைஞர் இயக்கங்களில் போரியல் அம்சங்களைப் பற்றி மாத்திரமல்லாது, தமிழரின் போரியற் பண்புகள் பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடரை எழுதினான். புறநானூறு முதல் எட்கார் தேர்ஸ்ட்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற காலனித்துவ காலப் பகுதி வரையுள்ள சகல முக்கிய சான்றுகளையும் பயன்படுத்தி, தமிழரின் போராடும் பண்பு பற்றி விரிவாக எழுதியிருந்தான். தமிழர் வரலாறு அவ்வாறு புதிதான ஒரு வாசிப்பைப் பெற்றதும், அரசியல்வாதிகள் அரசியற் விமர்சகர்கள், அரசியல் மாணவர்கள் எனப் பல்வேறு நிலைபட்டவர்கள் அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
இன்னொரு நிலையில் கூறுவதானால் தமிழர் போராட்ட உணர்வுகள் பற்றிய கொள்கை நிலைப்பட்ட, பிரயோக நிலைப்பட்ட ஆய்வினை ஏறத்தாழ சர்வதேச போரியல் பின்புலத்தில் எடுத்துக் கூறும் தனது திறனை அக் கட்டுரைகள் மூலம் சிவராம் காட்டினான்.
சமூக விஞ்ஞானிகள் சங்க ஒருங்குகூடல் என்று நினைக்கிறேன். குமாரி ஜயவர்த்தன, சாள்ஸ் அபயசேகர, நியூட்டன் குணசிங்க போன்றவர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது வடக்கில் தொடங்கியிருந்த போர்பற்றி மேர்வின் டி சில்வா கூறிய ஒரு குறிப்புரை என் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. "சிவராமின் கட்டுரைகளை வாசிக்கும் பொழுதுதான் இந்த போராட்டத்தின் ஆழ, அகலம் குறிப்பாக, அதன் அரசியல் ஆழம் புரிகிறது என்ற கருத்துப்பட மேர்வின் டி சில்வா கூறினார்.
2005 இல் சிவராம் காலமான பொழுது அவறைப் பற்றி தமிழர்கள் அல்லாத அரசியல் விமர்சகர்கள் எழுதியபொழுது இந்த அம்சத்தையே வற்புறுத்தினர் என்று கூறலாம். அதாவது, ஈழத் தமிழர் உரிமைப் போராடத்தின் நியாயப்பாடுகளை அந்த போராட்டத்திலே சம்பந்தப்பட்டுள்ள போரியல் முறைமைகளை சிவராம் எழுதியதுபோன்று, வேறெவருமே தமிழர்கள் அல்லாதவர்கள் விளங்கும்படி எழுதவில்லை என்பதைக் கூறினர். சிவராமின் எழுத்து வெறுமனே தமிழர் நிலைப்பாட்டின் ஆங்கில மொழி எடுத்துக் கூறலாக அமையாது, உலகளாவிய உரிமை போராட்டங்களை, உரிமை போராட்டங்களுக்குரிய போரியற் பின்புலத்தில் எடுத்துக் கூறினான். மேலும், சற்று குறிப்பாகக் கூறினால் ஈழத் தமிழர் போராட்டத்தையும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் போரியல் முறைமைகளையும் குறிப்பாக, அதன் தலைமையையும் இந்த வட்டத்தினுள் வைத்து ஆராய்ந்தானெனவும் அந்த நோக்குக்கு ஒரு சர்வதேச வலுவிருந்தது.
இவ்வாறு எழுதுவதனால் தமிழர் நிலைபட்ட கள நிலைவரங்களை காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதெனினும், அந்த எழுத்துகள் இந்த போராட்டத்தை சர்வதேசமயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன என்பது இப்பொழுது தெரியவருகின்றது.
இக்கட்டத்தில் ஒரு முக்கியமான வினாவினை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்த பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினவாகும். இதற்கான பதில் மிகக் குறுகியது. வேறொருவரும் இல்லை.
இந்த எழுத்தினுள்ளே ஒரு செல்நெறியிருந்தது. அது அந்த போராட்டத்தின் சில குறைபாடுகளை அதிகம் அழுத்திக் கூறாமையேயாகும். சிவராம் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என்னுடைய ஒரு இளம் நண்பர், சிவராமிடத்து அந்த வினாவைக் கேட்டார். சிவராம் சொன்னார், இந்த குறைபாடு எனக்குத் தெரியும். ஆனால், அதை எழுதுவதன் மூலம் இந்த உரிமைப் போராட்டம் தோற்கடிக்கப்படத் தக்கது என்பதை எடுத்துக் கூற விரும்பவில்லை எனச் சொன்னான். உனது நிலைப்பாட்டில் இது ஒரு முரண்பாடாக இல்லையா என நான் கேட்டேன். ஓரளவு முரண்பாடு உள்ளதுதான். ஆனால், நான் அதனுள்ளிருந்து வெளிவர விரும்பவில்லை என்று சொன்னான்.
சிவராமை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்றாலும், அந்த கணத்திலேதான் மகாபாரதத்துக் கர்ணனிலும் பார்க்க பெரியவனாக உண்மையான ஒரு வீமனாக என் கண் முன்னே நின்றான். இந்தப் புலமை நேர்மை, பச்சோந்திகளிடம் கிடைக்காத ஒன்று.
சிவராமினுடைய இந்த எழுத்தாற்றல்கள் சிவராமை இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவராலயங்களின் விருப்புமிக்க விருந்தினனாக்கிற்று. வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில் தொடங்கிய விருந்துபசாரங்கள் பின்னர் வெளியே அவ்வத் தலைநகரங்களிலேயே நடைபெற்றன. இலங்கை பற்றி ஆர்வங் கொண்டிருந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள், அவ்வமைச்சுகளின் ஆலோசகர்கள், சிவராமை சந்திப்பதை தமது முக்கிய நிகழ்ச்சி நிரல்களுள் ஒன்றாக வைத்திருந்தனர். சென்ற வருடம் மே மாதத்தில் ஜப்பான் செல்லவிருந்தான் என்ற தகவல் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது.
இப்பொழுதுதான் புலனாகின்றது, சிவராம் தன் போக்கில் ஈழத்து உரிமைப் போராட்டத்தில் ஒரு அரசியல் தூதுவனாக விளங்கினான் என்பது.
சிவராமை அறிந்திருத்தல் என்பது சிக்கல்கள் பல நிறைந்த ஒரு விடயமாகும். உண்மையில் சென்ற வாரந்தான் ஒரு இளம் நண்பர் சிவராம் என்னைப் பற்றி தன்னிடத்தில் கூறியிருந்ததை என்னிடத்துக் கூறினார். இப்படியெல்லாம் நினைத்திருந்தானா என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் தாரையாக ஓடாவிட்டால், நான் மனிதனல்லன் என்பது கருத்து. எனக்கும் சிவராமுக்கும் 1978 முதல் தொடர்பிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது (1978) இல் சேர்ந்த முதல் இரண்டு மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில சிறப்பு நிலை மாணவன் என்ற வகையில் தமிழ் ஆராய்ச்சி சம்பந்தமான பல வினாக்களை, ஏறத்தாழ 7,8 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். சர்வதேச இலக்கிய, வரலாற்றியல் ஆய்வு மொழிகளைப் பயன்படுத்தி அந்த வினாக்களை அமைத்திருந்தான். கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் எனது அறைக்கு வெளியே வந்தேன்.
அப்போது கைலாசபதி மாடிப்படி நோக்கி ஏறிவந்தார். இந்தப் பையனை உனக்குத் தெரியுமா எப்படி எழுதுகிறான் பார் என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை கைலாசபதியிடம் நீட்டினேன். எனக்கும் ஒரு கடிதம் வந்தது என்று கைலாசபதி சொன்னார். இருவருமே வியப்புடன் பேசிக் கொண்டோம்.
அப்பொழுது எனக்கு நேரடியாக சிவராமைத் தெரியாது. பின்னர் ஒரு தடவை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக ஞாபகம். பின்னர் உண்மையில் தராக்கி என்ற நிலையில்தான் என்னுடன் பழக்கமேற்பட்டது. தமிழர் வரலாறு பற்றிய தன்னுடைய வினாக்களுக்கு வேண்டிய பதில்களுக்கான தரவுகள் பற்றி அறிவதற்கு என்னோடு உரையாடுவான். 1984- 88 காலத்தில் பிரஜைகள் குழு வேலை காரணமாக கிளாலி கஷ்டங்களுக்கிடையேயும் நான் மாதாமாதம் கொழும்புக்கு வருவேன். சிவராமிடமிருந்து அரசியற் புதினங்களையும் அவன் வியாக்கியானங்களையும் அறிந்து கொள்வதே எனது பசியாகவிருந்தது. சிவராம் என்னை பல தடவைகளிலே மிக மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறான். நீங்கள் இந்த அரசியலில் இறங்க வேண்டாம். உங்கள் தமிழ் வட்டத்தினுள் நின்று கொள்ளுங்கள். நீங்கள் அதன் மூலம் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன என்று சற்று கோபமாகவே கூறுவான். வேறு சிலரும் அப்படிக் கூறுவது வழக்கம். ஆனால் அந்த குரலிலிருந்த உண்மையும், நேர்மையும் அந்த குரலுக்குரியவன் மறைந்ததன் பின்னர்தான் தெரியவருகின்றது.
சிவராம் அதிகம் பேச மாட்டார். மற்றவர்களை பேச வைக்கும் ஆற்றல் அவனிடமிருந்தது. அவனுடைய நட்புகளும் தொடர்புகளும் பல. அவற்றையெல்லாம் வலக்கை, இடக்கைக்கு தெரியாத முறையிலேதான் வைத்திருந்தான். மரணத்தின் பொழுதுதான் அந்த உண்மைகள் தெரியவந்தன. அவன் மறைந்து ஒரு மாதத்தின் பின்னர் எனக்கு தெரிந்த இளம் சிங்கள மாக்ஸிய சிந்தனையாளரொருவர் என்னிடம் சொன்னார் `அன்று என்னைச் சந்திக்கத்தான் பம்பலப்பிட்டியின் அந்த மதுச்சாலைக்கு சிவராம் வந்திருந்தார்' என்று.
அவனுடைய அறிவாழம் மிகப்பெரியது. பின்நவீனத்துவம் பற்றி நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது, அந்த விவாத இறுதியில் ஒரு நாள் சொன்னேன். இதில் இந்தனை நாட்களை செலவழித்ததன் நியாயப்பாடு இப்பொழுது சரியோ என்று எனக்கு விளங்கவில்லையென்றேன். அப்பொழுதுதான் பின்நவீனத்துவம் பற்றி தனது மெய்யியல் நிலைப்பாடுகளை என்னிடம் எடுத்துக் கூறினான். இதை, முன்னரேயே ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டேன்.
அவன் சிரித்துக் கொண்டான். அவனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் கிச்டெக்கர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சொன்னார், சிவராம் ஏறத்தாழ நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே நிறைய விவாதித்திருந்தார். அடப்பாவி அந்த புத்தகங்களை வாங்குவதற்கு நான் சிரமப்பட்டபோது கூட என்னிடம் பேசவில்லையே என்று கூறினேன். அவன் மேலும் சிரித்தான்.
1 comment:
very kind of u,issorya!
once i have seen his photo,standing in front of a tank,(smashed by tigers)
I pray more and more writers should emerge from tamilland!
Post a Comment