""ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரியாகும்'' என அல் கொய்தாவின் பிரதித் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய இணையத்தளம் மூலம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அல் ஷவாஹ்ரி, ஆப்கானிஸ்தானிலோ அன்றி பாகிஸ்தானிலோ மறைவிட வாழ்க்கை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. ""யூத தேசமான இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் முஸ்லிம்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்தமை என்பனவற்றை ஐக்கிய நாடுகள் சபை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் புனித நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல்களையும் அது நியாயப்படுத்தியுள்ளது'' என மேற்படி 104 நிமிட ஒலி நாடா செய்தியில் அல் ஷவாஹ்ரி குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பரில் 41 பேரை பலிகொண்ட அல்ஜியர்ஸிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்தின் மீதான இரட்டைக் குண்டுத் தாக்குதல் மற்றும் 2003 ஆம் ஆண்டில் 22 பேரை பலிகொண்ட பாக்தாத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக கட்டிடம் மீதான குண்டுத்தாக்குதல் என்பனவற்றை நியாயப்படுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் யூதர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என அவர் அச்சுறுத்தல் விடுத்தார். ""இறைவனின் உதவியுடனும், வழிகாட்டலுடனும் இஸ்ரேலிலும் அந்நாட்டுக்கு வெளியிலுமுள்ள யூதர்கள் மீது மாபெரும் தாக்குதலை நாம் நடத்துவோம் என எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு வாக்குறுதியளிக்கிறோம்'' எனக் கூறிய அல் ஷவாஹ்ரி, ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான படையினரை வெற்றி கொண்டதன் பிற்பாடு அல் கொய்தா, இஸ்ரேலுடனான போராட்டத்தை ஆரம்பிக்கும் எனத் தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் சீர்குலைவு ஆரம்பமாகிவிட்டதாக அவர் கூறினார்.
""நியூயோர்க்கிலும், வாஷிங்டனிலும் 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த சீர்குலைவின் அடையாளமாக உள்ளன. ஆனால் பேரரசுகள் ஒரு நிமிடத்தில் வீழ்ச்சியடையாது. அதற்கு பல தசாப்த காலங்கள் எடுக்கும். இதற்கு அண்மைய சிறந்த உதாரணம் சோவியத் ஒன்றியமாகும்'' என அல் ஷவாஹ்ரி தெரிவித்தார்
Thursday, 3 April 2008
ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரி - அல் கொய்தாவின் பிரதித் தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment