நக்சலைட்டுகளும் நல்ல இதயம் கொண்டவர்கள்தான்; லட்சியங்கள் மாற்றப்பட்டால் அவர்களும் நாட்டுக்கு ஆதரவாக இருப்பார்கள் என ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
தெற்காசிய அமைதி மாநாட்டை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பு அண்மையில் நடத்தியது.
இதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நக்சலைட்டுகளின் பெருக்கம் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்களின் சில பிரிவினரின் வளர்ச்சியில் அரசு அக்கறை காட்டாததால்தான் இந்தப் பிரச்னை உருவானது. நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்துவதில் ஆன்மிகம் மிகப்பெரும் பங்காற்ற முடியும்.
நக்சலைட் இயக்கங்களில் இருக்கும் இளைஞர்கள் கெட்டவர்களல்ல.
உண்மையைக் கூறினால், தாங்கள் கொண்ட கொள்கைக்காகவும் லட்சியங்களுக்காகவும் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் அளவுக்கு உறுதியானவர்களாகவும் நல்ல இதயம் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
வளர்ச்சிக்கு வன்முறை உகந்தது அல்ல என்பதை அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்தோமானால், நாட்டுக்கு ஆதரவாக அவர்கள் இருப்பார்கள்; அவர்கள் கோரும் சமத்துவம், நீதி போன்றவற்றைப் பெறுவதற்கு வன்முறையற்ற வழியைத் தேர்ந்தெடுப்பார்கள்.
உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்கள் துப்பாக்கிகளை ஏந்த மாட்டார்கள். நல்ல கல்வி பெறாதவர்களும் ஆன்மிக அறிவு இல்லாதவர்களுமே நக்சல் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நல்ல கல்வியைப் பெறும் குழந்தை அஹிம்சையில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கும். அதனால் கல்வியில் அஹிம்சையையும், ஆன்மிகத்தையும் சேர்ப்பது அவசியம்.
மக்களின் மனதையும் இதயத்தையும் இணைக்கும் பாலமாக ஆன்மிகத்தால் மட்டுமே செயல்பட முடியும்.
மதத்தின் பெயரால் மக்கள் பிரிந்து கிடந்தாலும், ஆன்மிக நிலை அவர்களைச் சேர்த்து வைக்கிறது என்றார் ரவிசங்கர்.
உலகில் வன்முறை பெருகி வருவதற்கு என்ன காரணம் என செய்தியாளர் கேட்டதற்கு, "மக்கள் நம்பிக்கை இழப்பதுதான் காரணம்' என்றார் அவர்.
அமைதி மாநாட்டை நடத்துவதற்கு நார்வே நாட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, "இங்கு எல்லாமே குளிர்ச்சியாக இருக்கிறது; அதனால் அனைவரும் குளிந்த மனநிலையில் பல்வேறு பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்க முடியும்' என்றார் ரவிசங்கர்.
Monday, 14 April 2008
நக்சலைட்டுகளும் நல்லவர்களே!: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment