வடக்கில் ஒரு படைத்துறை வெற்றியை கொடுத்துவிட்டால் அது பல அனுகூலங்களை ஏற்படுத்தலாம் என்பது அரச தரப்பின் ஆவலாக உள்ளது. எனவே தான் மடுப்பகுதி நோக் கிய நகர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த இந்த நகர்வை மேற்கொண்டு வரும் 57 ஆவது படையணியின் 1 ஆவது மற்றும் 2 ஆவது பிரிகேட்டுக்கள் மடுவுக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி மடு புனித தேவாலயத்தில் இருந்த மடுமாதா சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது, படை நடவடிக் கையின் நோக்கத்தை தலைகீழாக மாற்றிவிட்டுள்ளது.
அதாவது மடுமாதாசிலை இல்லாத ஆலயம் அரசியலில் எதிர்மறையான விளைவுகளையே எற்படுத்தும் என்பது அரசியல் அவதானிக ளின் கருத்து. 1583 ஆம் ஆண்டு மாந்தையில் இருந்த மாதா டச்சுக்காரரின் வரவை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 1670 ஆம் ஆண்டு மடு காட்டுப்பகுதிக்கு நகர்ந்திருந்தது. அது ஒரு சரித்திர நிகழ்வாகவே பதிவாகியது.
தற்போது வரலாற்று சிறப்புமிக்க மாதா சிலை மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக நகர்த்தப்பட்டது அதன் இரண்டாவது கட்ட வர லாற்று சான்றின் ஆரம்பமாகும்.
இதனிடையே கடந்தவாரம் நடைபெற்ற மேலும் இரு சம்பவங்களும் தென்னிலங்கை அரசியலையும், பாதுகாப்பையும் பெரும் குழப்பத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது.
கடந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தின் போது அரசை காப்பாற்றுவதற்கு தோள்கொடுத்த ஜே.வி.பி இரு கூறுகளாக பிரிவடையும் நிலையை அடைந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இந்த கட்சி தற்போது கட் சிக்கு விசுவாசமான 26 உறுப்பினர்களையே கொண்டுள்ள நிலையை அடைந்துள்ளது.
கட்சிக்குள் தோன்றிய நெருக்கடிகளைத் தொடர் ந்து அதன் நாடாளுமன்ற குழு தலைவரும், பிரசாரப்பிரிவு தலைவருமான விமல் வீரவன்சவுடன் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படப்போவதாக அறிவித்துள்ளனர். இது ஜே.வி.பியின் பலத்தை மூன்றில் இரண்டாகக் குறைத்துள்ளது.
தன்னிச்சையாக இயங்கப்போகும் ஜே.வி.பி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தரலாம் என்ற கருத்துக்கள் பரவலாக எழுந்துள்ள போதும் அதற்கு எதிராக ஏனைய உறுப்பினர்கள் செயற் படலாம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது.
இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் இருந்து வடகிழக்காக 19 கி.மீ தொலைவில் உள்ள கம்பகா மாவட்டத்தின் வெலிவேரியா பகுதியில் காலை 7.45 மணியளவில் நடை பெற்ற குண்டு வெடிப்பில் அரசின் பிரதம கொறடாவும், நெடுஞ்சாலைகள் போக்கு வரத்து துறை அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டுள்ளதும் தென்னிலங்கையின் பாதுகாப்புக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இந்த சம்பவத்தில் அமைச்சருடன் மேலும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 83 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல் லப்பட்டவர்களில் 12 பேர் இதுவரை அடை யாளம் காணப்பட்டபோதும் இருவர் அடை யாளம் காணப்படவில்லை.
கொல்லப்பட்டவர் களில் தேசிய தடகள விளையாட்டு பயிற்சியா ளர் லக்ஸ்மன் டீ அல்விஸ், அமைச்சரின் பாது காப்பு பிரிவைச் சேர்ந்த பிரதம பாதுகாப்பு பரி சோதகர் கே.டீ.ஆர் கன்னங்கரா, இராணுவத் தின் சார்ஜன் மேஜர் தர அதிகாரியான பிரபல தேசிய மரதன் ஓட்ட வீரர் கே. ஏ கருணாரத் தின ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்த சம்பவத்தில் கம்பகா மாவட்ட மூத்த சுப்பிரீண்டன்ற் ஹெக்டர் தர்மசிறீ படுகாய மடைந்துள்ளார். ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய சகா என்பதுடன் சுதந்திரக்கட்சி யிலும் மிகவும் முக்கிய பிரமுகராவார். இலங்கை அரசில் உள்ள அதிக பாதுகாப்பு கொண்ட முக்கிய பிரமுகர்களிலும் இவர் ஒருவர்.
கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி நாடாளு மன்ற கூட்டத்தொடரில் கலந்துவிட்டு வன் னிக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி. சிவநேசன் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து அரை மணி நேர பயண இடைவெளியில் கிளைமோர் தாக்குதலில் படு கொலை செய்யப்பட்டிருந்தார்.
தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர் படு கொலை செய்யப்பட்ட நான்காவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனாகும். நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல் லப்பட்டதில் இருந்து சரியாக ஒரு மாத முடி வில் அதாவது ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே மீதான தாக் குதல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடை பெற்ற அமைதி பேச்சுக்களில் பெர்னாண்டோ புள்ளே கலந்து கொண்டிருந்தார். சட்டத்தரணி யான பெர்னாண்டோபுள்ளே 1972 களில் சுதந் திரக்கட்சியில் இணைந்து அரசியலில் நுளைந்த போதும் கம்பகா மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினராக 1989 ஆம் ஆண்டே தெரி வாகியிருந்தார். அதன் பின்னர் பல அமைச்சு பொறுப்புக்களை வகித்துவந்த அவர் சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளி.
இறக்கும் போது சுதந்திரக்கட்சியின் தவிசாளராகவும் பணி யாற்றி வந்தார். தற்போது ஆட்சிக்கு உதவும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டுவந்தவ ரும் அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே தான்.
கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலை முன்னிட்டு திருமலை மாவட்ட ஐக்கிய மக்கள் முன்னணி அரசின் அமைப்பாளராக அமைச்சர் பெர்னாண்டோ புள்ளேயே நியமிக்கப்பட்டிருந்ததுடன், கிழக் கில் செயற்படும் துணை இராணுவ குழுவின ரின் ஆயுதங்கள் களையப்படக்கூடாது எனவும் அவர் அண்மையில் வாதிட்டிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜாஎல பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குத லில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான தேசிய கட்டடத்துறை பிரதி அமைச் சர் தஸாநாயக்கா கொல்லப்பட்டிருந்தது நினை விருக்கலாம். அந்த தாக்குதல் அமைச்சர் பெர் னாண்டோபுள்ளேயை குறிவைத்தே மேற் கொள்ளப்பட்டது என புலனாய்வுத்துறை தெரி வித்திருந்தது.
அதன் பின்னர் அமைச்சர் பெர்னாண்டோ புள்ளேயுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட இராணுவத்தளபதி அவரின் பாது காப்புக்களை மேலும் அதிகரித்திருந்தார். அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் பாது காப்புக்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்க ளுக்கு பொறுப்பான பிரதம பாதுகாப்பு பரி சோதகர் கே.டீ.ஆர் கன்னங்கராவும் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த மிகவும் தரம் வாய்ந்த அதிகாரியாவார். கிழக்கில் நடை பெற்ற பல தாக்குதல்களில் அவர் சிறப்பாக செயற்பட்டதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சருக்குரிய குண்டுதுளைக்காத வாக னம், 18 சிறப்பு அதிரடிப்படை கொமோண் டோக்கள், சிறப்பு அதிரடிப்படையினரின் பின் தொடரும் வாகனங்கள் இரண்டு என்பன வழங்கப்பட்டிருந்ததுடன், அவரின் இல்லத்தி னதும், அலுவலகத்தினதும் பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இவ்வளவு பாதுகாப்புக்களுக்கு மத்தியில் குண்டு தாக்குதலில் அமைச்சர் சிக்கிக்கொண் டது அரச தரப்பில் பெரும் அதிர்ச்சிகளை தோற்றுவித்துள்ளது. புதிய கண்டி வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் காலை 6.30 மணியளவில் வந்தி ருந்த போதும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க தாமத மாகியதனால் அவர் அருகில் இருந்த பௌத்த ஆலயங்களுக்கு சென்று விட்டு பின்னர் 7.30 மணியளவில் திரும்பி வந்திருந்தார்.
விளையாட்டு மைதானத்தில் 10 நிமிடங்கள் உரையாற்றிய பின்னர் மரதன் ஓட்டப்போட் டியை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு வீதிக்கு வந்த போது அவரை முன்னாள் மரதன் ஓட்ட வீரர் கருணாநாயக்கா வரவேற்று கைலாகு கொடுத்து அழைத்து சென்றிருந்தார்.
70 ஓட்டப்பந்தய வீரர்கள் அணிவகுத்து நிற்க அதனை ஆரம்பிக்க முற்பட்டபோது பாரிய ஓசையுடன் குண்டு வெடித்துள்ளது. ஒரே புகை மண்டலம் எல்லோரும் சிதறி ஓடினார்கள்.
புகை அடங்கிய பின்னர் அந்த இடத்தில் இருந்து அமைச்சரின் சடலம் நெஞ்சுப் பகு திக்கு கீழே சிதைவடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டது. அங்கு வெடித்த குண்டு மிக வும் சக்திவாய்ந்த குண்டு என தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் வழமை போல இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் தெரிவித் துள்ளனர்.
இது ஒரு மனித கிளைமோர் தாக்குதலாக இருக்கலாம் என மூத்த இராணுவ அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார். குண்டுச் சிதறல்கள் நேரடியான தாக் கத்தை (ஈடிணூஞுஞிtடிணிணச்டூ ஞடூச்ண்t) எற்படுத்தியதுடன் அமைச்சரை மிகவும் கடுமையாக தாக்கியுள் ளதாகவும், அமைச்சர் குண்டு துளைக்காத அங்கியை அணிந்திருந்தாலும் உயிர்தப்பியிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மரதன் ஓட்டத்தில் பங்குபற்றி யவர்களில் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியி ருக்கலாம் என்ற சந்தேகங்களும் படைத்தரப் பில் எழுந்துள்ளன. 22 ஆவது இலக்கமுடைய மேற்சட்டையை அணிந்திருந்த நபரே தாக்கு தலை நடத்தியதாகவும் அந்த நபர் குண்டு வெடிப்பதற்கு முன்னர் தனது இடுப்பு பகு தியை கைவிரல்களினால் அழுத்தியதை ஒளிப் படங்களில் இருந்து தாம் அறிந்து கொண்டதா கவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வெலிவேரியா பகுதியில் வெடித்த குண்டு மிகவும் பெரியது எனவும் அதனை ஓட்டப்பந்தைய வீரர்கள் தமது பெனி யனுக்குள் மறைப்பது கடினமானது எனவும் தெரிவித்துள்ள புலனாய்வுத்துறை, இது வீதி யில் மறைத்துவைக்கப்பட்ட குண்டாக இருக்க லாம் அல்லது அமைச்சருக்கு அருகில் நின்ற நபர் வெடித்து சிதறியிருக்கலாம் எனவும் தெரி வித்துள்ளது.
ஏறத்தாழ 4 கிலோ இரும்புச்சன்னங்களை யும், அதிசக்திவாய்ந்த சீ4 வெடிமருந்தையும் கொண்ட இந்த குண்டு அமைச்சருக்கு அண் மையில் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக பல குழப்பங்கள் படைத்தரப்பில் எழுந்துள் ளது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகள், வான் தாக்குதல்கள், ஆழஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் என வடக்கை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியபடி தென்னிலங்கையின் பாதுகாப்பை அரசால் உறுதிப்படுத்த முடியுமா என்பதுதான் இந்த தாக்குதலின் பின்னர் தென்னிலங்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வி.
தென்னிலங்கையில் எற்படும் அச்சுறுத்தல் கள் வெறும் பாதுகாப்பு தொடர்பானது மட்டு மல்லாது, நாட்டின் பொருளாதார மற்றும் அரசி யல் அடித்தளங்களையும் ஆட் டங்காண வைக் கக்கூடியது.
நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படை யில் இலங்கை மிகவும் வறிய நாடாக மாறி வருகின்றது என ஆசியா பசுபிக் பொருளாதார மற்றும் சமூகசேவைகள் அமைப்பு அதன் 2008ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல் லாது இலங்கையின் வாழ்க்கைச்செலவு 28 விகிதத்தை எட்டிப்பிடித்துவிடும் எனவும் பொருளியல் நிபு ணர்கள் தொடர்ந்து எச் சரித்து வருகின்றனர்.
உலகின் பொரு ளாதாரமும் இந்த ஆண்டின் ஆரம் பத்தில் இருந்து உறுதியா னதாக இல்லை. அடிக் கடி தடம்புர ளும் இந்த பொரு ளாதார சிக்கல்கள் மூன்றாம் உலக நாடுகளை அதிகம் பாதிக்கும் என்பதில் ஐய மில்லை.
இந்த பொருளாதார நெருக்கடிகளால் ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அமைப்பும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. உலகின் 80 நாடுகளை சேர்ந்த 73 மில்லி யன் மக்களுக்கு உணவ ளித்து வரும் இந்த அமைப்பு அடுத்து வரும் மாதங்களில் இந்த வறிய மக்களுக்கு உணவளிக்க 500 மில் லியன் டொலர் கள் தேவை என்ற அவசர அறிவித் தலை விடுத்துள்ளது.
உலகின் இந்த பொருளாதார பாதிப் புக்களின் தாக்கங்கள் இலங்கையையும் பாதிக்கும் என்பது உண்மை. எனினும் இலங்கையைப் பொறுத்தவரை போர் நேரடியாகவும் நேரடியற்ற விதத்திலும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கங்களை எற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்த குண்டும் இதனை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
வெலிவேரியாவில் வெடித்த குண்டு, ஜே.வி.பியின் பிளவு என்பன வடபோர்முனையின் கவனத்தை தற்காலிகமாக தென்னிலங்கை நோக்கி நகர்த்தியுள்ளதுடன், மடுவில் நடைபெற்ற சம்பவமும் படையினரின் இலக்கின் திசையை மட்டுமல்லாது அரசியல் எதிர்பார்ப்புக்களையும் மாற்றியமைத்து விட்டது என்றால் மிகையாகாது.
[நன்றி - வீரகேசரி]
Saturday, 12 April 2008
வேல்ஸிலிருந்து அருஷ் எழுதிய ''தென்னிலங்கையை உலுக்கிய அமைச்சர் மீதான தாக்குதல்''
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment