தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கின்றது. 30 கி.மீ தொலைவிலுள்ள இடைத் தங்கல் முகாமில் அகதியாகிவிட்டார் மடு மாதா.
நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும் போரைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான படைக்கலங்களைப் பெறும் முயற்சியில் அரசு ஈடுபடுவது குறித்து, கேள்விகேட்பது கூட இனத் துரோகமாகக் கணிப்பிடும் துன்பகரமான
நிலைமை தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளது.
சிங்கள மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை, பேரினவாத அரசியல் மாயை விழுங்குவதை எடுத்துக் கூறுவதற்குக்கூட வெகுஜன அரசியல் பாடமெடுக்கும் புதிய பூமியாளர்கள் இல்லையென்றே தோன்றுகிறது.
அமெரிக்காவின் தூண்டுதலால் திபெத் மக்களின் தனி நாட்டுப் போராட்டம் உருவாவது போல் விளக்கமளிக்கப்படலாம்.
உள்நாட்டு அரசியல் நிலைமைகளைப் புரிந்து கொள்வதை விட சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்வது சிலருக்கு இலகுவாக இருக்கிறது.
ஆகவே இலகுவான தளத்தில் தரித்து நின்றவாறு உலக வரலாறுகளையும் போராட்ட விளக்கங்களையும் நேபாள முனிவர்களின் மாயக் கண்ணாடியூடாகத் தரிசிக்கலாம் போல் தெரிகிறது.
தற்போது தென்னிலங்கை மாக்சிசவாதிகளாகத் தம்மைச் சுய பிரகடனம் செய்யும் ஜே.வி.பி. அரசியலில் உடைவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
வரவு செலவுத் திட்டம், உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்கிற நிறைவேற்றப்பட்ட நீண்ட நிகழ்ச்சி நிரலில் அடுத்ததாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலும் இணைகின்றன. கிழக்கின் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக அங்குள்ள துணைக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறுகிறார்.
துணைத் தலைவர்களான லால் காந்தாவும் அநுர குமார திசாநாசயக்கவும் அதனை வழி மொழிகிறார்கள்.
ஏற்கனவே ஜே.வி.பி. தலைமையுடன் முரண்பட்ட நந்தன குணதிலக்க அரசிற்குச் சார்பாக செயல்படுகிறார் என்பது தெரிந்த விடயம்.
சிறிய தேர்தல்களுக்கூடாக ஜே.வி.பி. யினுள் உடைவினை உருவாக்கி பொதுத் தேர்தல் நடைபெறும்போது அக்கட்சியை முற்றாகப் பலவீனப்படுத்தும் உத்தியே அரசால்பிரயோகிக்கப்படுகிறது.
இன்றைய அரசியல் நிலைவரப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே கட்சியின் பலம் தீர்மõனிக்கப்படுகிறது. ஐ.தே.கவை உடைத்தது போன்று விமல் வீரவன்சவின் துணையோடு ஜே.வி.பி.யை பலவீனமாக்கலாமென்கிற திட்டம், வெற்றியளிக்குமா என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
வீரவன்சவின் அரச சார்பு நிலைப்பாடு, தடுமாறும் ஜே.வி.பி.யின் கொள்கை கோட்பாட்டின் அடிப்படையிலிருந்து வேறுபடவில்லை. ஜே.வி.பி.யின் அரசியல் முகமாக வெளிப்படுத்தப்பட்ட விமல் வீரவன்சவின் பேச்சாற்றல், அக்கட்சியின் மக்களிற்கான முகவரியாக அடையாளப்படுத்தப்பட்டு இனவாதத்தினூடாக சிங்கள மக்களை வென்றெடுக்கும் பணியை அவருக்கு வழங்கியுள்ளது.
இடதுசாரித் தத்துவமும் இனவாதமும் இணைந்த கூட்டுக் கலவையில் இனவாதத் தளத்தில் நின்று செயற்படும் வீரவன்சவின் பேரினவாத ஆளுமையின் சான்றாக அவர் அங்கம் வகிக்கும் தேசபக்த தேசிய இயக்கச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்.
இவர் ஜே.வி.பி. யிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் வீரவன்ச இல்லாத ஜே.வி.பி. இனவாதக் கொள்கைகளைக் கைவிடலாமெனக் கற்பிதம் கொள்வதும் தவறான பார்வையாகும். ஏற்கனவே ஆயுதக் குழுக்களின் துணையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஐ.தே.க.விலிருந்து பெரும் தலைவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிறு குழுவாக அக்கட்சி மாற்றப்பட்டுவிட்டது.
எஞ்சியுள்ள உயர் மட்டத் தலைவர்களும் சட்டி, பானை உடைத்து மக்களை அணி திரட்டும் நடவடிக்கைகளை எத்தனை காலத்திற்கு நீட்டிச் செல்வார்களென்று தெரியவில்லை.
போரிற்கு ஆதரவு வழங்காதோர், தென்னிலங்கை அரசியல் நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போட முடியாதென்கிற உண்மையை ஜே.வி.பி.யும் புரிந்து கொள்ளும்.
ஆகவே பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஜே.வி.பி. யின் பலத்தை சிதைப்பதற்கான காய் நகர்த்தல்களுக்கு முன்னுரிமை வழங்குவதை தமது பிரதான உத்தியாக அரசு கணிப்பிடுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டபோது,
ஆதரவளித்த ஜே.வி.பி.யினர் ஆட்சியதிகார பங்கிடுதலில் அக்குழு பங்கு கொள்வதை ஏற்க முடியாத நிலையிலுள்ளனர். அதாவது ஆட்சியதிகாரத்தில் அரசு பலமடைவதை எவ்வகையிலாவது தடுக்க வேண்டுமென்கிற கையறு நிலையில் தற்போது ஜே.வி.பி. உள்ளது.
ஆகவே இரு துருவ நிலை நோக்கி நகரும் இலங்கை அரசியலில் இடை நிலையில் தளம் அமைக்கும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு, ஐ.தே.கவின் தற்போதைய நிலைக்கே அக்கட்சியை இட்டுச் செல்லும்.
தென்னிலங்கை அரசியல் கள நிலவரங்களை மதிப்பீடு செய்தால் அரசிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையே உருவாகும் அதிகரித்த முரண் நிலை சீன ஆதிக்க அரசியல் ஆளுமைக்கான போராட்டத்தை தோற்றுவிக்கும் பரிணாமத்தை உள்ளடக்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்புலக் காரணிகளும் இதற்குள் அடக்கப்படலாம். ஜே.வி.பி.யின் இந்திய விஸ்தரிப்புவாத மீள் எழுச்சியை சமன் செய்ய வேண்டிய தேவையும் அரசுக்கு உண்டு.
ஆயினும் விடுதலைப் புலிகளை மையப்படுத்திய நிகழ்ச்சி நிரல் இவ்வாறு அமைகையில் மடு தேவாலயக் குவிமையம், புலிகளின் அடுத்த கட்ட நகர்விற்கான மையப் புள்ளியாக உருக்கொள்வதை அவதானிக்கலாம். விடுதலைப் புலிகளின் படைத் துறைப் பேச்சாளர் இளந்திøரயனும், சார்ள்ஸ் அன்ரனி படையின் சிரேஷ்ட தளபதி அமிர்தாப்பும் மடு குறித்து வெளியிட்ட சில தகவல்களையும் உற்று நோக்க வேண்டும்.
அதேவேளை போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து புலிகள் இன்னமும் விலகவில்லையென்றும் நோர்வேயின் அனுசரணைப் பணியினை தாம் இன்னமும் ஏற்றுக் கொள்வதாக அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் விடுத்த அறிக்கையையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
இக்கூற்றினை திரும்பவும் வலியுறுத்திய பா.நடேசன், இராணுவத்தின் மடு தேவாலயம் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்கிற ரீதியில் கடித மொன்றை எரிக் சொல்ஹெய்முக்கு அனுப்பியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை எவ்வாறாயினும் உள்நுழைக்க முயலும் மேற்குலகம், நடேசனின் வேண்டுதலை செவிமடுக் குமாவென்பது சந்தேகமே.
புலிகளின் கோரிக்கையை நோர்வே அரசு ஏற்றுக் கொண்டாலும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வல்லமை அவர்களிடம் உள்ளதாவென்பதில் சிறிதளவு நம்பிக்கையும் தமிழ் மக்களிடம் இல்லை.
இவர்கள் எதையாவது மேற்கொண்டு மடு மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவார்களென்கிற நம்பிக்கை புலிகளுக்கும் கிடையாதென்பதே சாசுவதமான உண்மை.
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட மேற்குலகச் சக்திகள், புலம்பெயர் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைத் தளமொன்றினை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபடுகையில், உணர்திறன்மிக்க மடுச் சிக்கலில் மாட்டுப்பட விரும்ப மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளின் போரியல் நகர்வுப் பொறிக்குள் அகப்படாமல் விலகி நிற்பதே மேற்குலகின் சிந்தனையாக அமையலாம். ஆயுத விநியோகம் தொடர்பாக இந்தியா மீது தொடுத்த குற்றச்சாட்டும் மடு ஆக்கிரமிப்பு குறித்து நோர்வேக்கு விடுத்த வேண்டுகோளும் இரு வேறுவகைப்பட்ட பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் பிராந்திய நலன் விரும்பிகளுடன் அண்மைக் காலமாக புலிகளின் தொடர்பாடல் அதிகரிப்பதை அவதானிக்க வேண்டும்.
மடு என்கிற அரசியல் இராணுவ மையப் புள்ளிக்குள், வலிந்த தாக்குதலிற்கான வடிவங்கள் கருக்கொள்வதை உணரக் கூடியதாகவுள்ளது.
புத்தாண்டும் மாகாண சபைத் தேர்தலும் இவ்வகையான வடிவங்களுக்கு கால வரையறைகளையும் எல்லைகளையும் வகுக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கும்.
தென்னிலங்கையில் அதிரும் குண்டுச் சத்தங்கள், வடபோர் முனை நிகழ்வுகளின் நீட்சியென்பதை ஆட்சியாளர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்களென்று மதிப்பிடலாம்.
[நன்றி - வீரகேசரி]
Saturday, 12 April 2008
இதயச்சந்திரன் எழுதிய ''அடுத்தகட்ட நகர்வின் மையப்புள்ளி மடு''
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment