மலேசியாவில், அடுத்தடுத்து இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள் ளன. இதுநாள் வரை, பிளவுப்பட்டு இருந்த மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள், ஓர் அணியில் நின்று செயல்பட முடிவு செய்துள்ளன. மலேசியாவில், `ஐக்கிய மலாய் தேசிய கழகம்’ என்ற கூட்டணி ஆட்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
பிரதமராக, அப்துல்லா படாவி உள்ளார். சம உரிமை கேட்டு, இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டது, பொருளாதார சிக்கல் ஆகியவை, மலேசிய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தன. இந்த சூழ்நிலையில், மார்ச் 8ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. பிரதமர் படாவி தலைமையிலான கூட்டணியே, இதில் வெற்றி பெற்றது. ஆனால், முன்பை போல, பெரும்பான்மையான இடங்களை இக்கூட்டணி கைப்பற்ற முடியவில்லை.
மாறாக, மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள், பல இடங்களை கைப்பற்றி, தங்கள் பலத்தை அதிகரித்து கொண்டுள்ளன. மலேசியாவில், முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான இஸ்லாமிய கட்சி, சீன மக்களின் பிரதிநிதியாக செயல்படும் ஜனநாயக நடவடிக்கை கட்சி, நீதிக்கட்சி ஆகியவையே முக்கியமான எதிர்க்கட்சிகள்.
இக்கட்சிகள், ஓர் அணியில் திரண்டு நிற்கும் முயற்சி, 1999ம் ஆண்டு எடுக்கப் பட்டது. ஆனால், மலேசியாவை, இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என, அன்வர் இப்ராகிம் கூறியதும், இந்த கூட்டணி முறிந்து போனது. தற்போது, இந்த மூன்று கட்சிகளும், மீண்டும் ஓர் அணியில் திரண்டுள்ளன. ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவது என்று, இக்கட்சியின் தலைவர்கள் நேற்று முடிவு செய்தனர்.
இஸ்லாமிய நாடு கோரி க்கை குறித்து, கூட்டணி கட்சிகளிடம் பேசி பின்னர் முடிவு செய்யப்படும் என, அன்வர் தெரிவித்தார்.
ஆளும் கட்சியில் அதிருப்தி: ஆளும், ஐக்கிய மலாய் தேசிய கழகத்தில், பிரதமர் படாவிக்கு எதிராக, அதிருப்தி அலை எழுந்துள்ளது. அவர் மீது அதிருப்தியில் உள்ள 500 பேர், கோலாலம்பூரில் உள்ள ஓட்டலில் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இதில், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது, அவரது மகனும், எம்.பி.,யுமான முக்ரிஷ் மகாதிர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் பதவியில் இருந்து படாவி விலக வேண்டும் என, இவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
அத்வானிக்கு கோரிக்கை: மலேசியாவில், இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவாக போராடிய `இண்ட்ராப்’ அமைப்பைச் சேர்ந்த உதயகுமார், மனோகரன், கங்காதரன், கணபதிராவ் மற்றும் வசந்தகுமார், மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி, தற்போது டில்லி வந்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு: மலேசிய பார்லிமென்ட் தேர்தலில், `இண்ட்ராப்’ அமைப்பின் மனோகரன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவர் இன்னமும் சிறையில் உள்ளார். `இண்ட்ராப்’ அமைப்புக்கு எதிராக செயல்பட்ட மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியினர், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தனர்.
டத்தோ சாமிவேலு பெற்ற தோல்விக்கு, எங்கள் அமைப்பிற்கு மக்களிடம் உள்ள ஆதரவே காரணம். சீனர்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். பல நாடுகளுக்கு சென்று, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறோம். பா.ஜ., தலைவர் அத்வானியைச் சந்தித்து ஆதரவு கேட்டோம். எங்கள் பிரச்னை குறித்து, இந்திய பார்லிமென்ட்டில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அவரிடம் கோரியுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேச விரும்புகிறோம். இவ்வாறு வேதமூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment