மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை இன்று (17.4.2008) அன்று மாலை 5.10 மணி முதல் 5.35 மணி வரையிலும், தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற, தெற்கு ஆசிய அமைதி மாநாடு குறித்தும், அதில் தாம் கலந்து கொண்டது குறித்தும் பிரதமரிடம் எடுத்துக்கூறினார். |
கோரிக்கை விண்ணப்பம் ஒன்றையும் பிரதமரிடம் வழங்கினார். இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ கடிதத்தில் எழுதி இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், ''நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை'' என்றார். இலங்கையின் இராணுவத் தளபதிகளும், அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதாகச் சொன்னார்களே என்றவுடன், ''அது தவறான தகவல் - உண்மை அல்ல'' என்றார் பிரதமர். அப்படியானால், அங்கே உள்ள மக்களை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்கிறார்களா? என்று கேட்டார் வைகோ. பாகிஸ்தான், சீனாவிடம் இலங்கை ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு இருப்பது எங்களுக்குத் தெரியும் என்றார் பிரதமர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் தெரிவித்து இருக்கிறோம் என்றும் பிரதமர் சொன்னார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம். அது ஒரே பகுதியாக இணைக்கப்பட வnண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்கு மாறாக, கிழக்கு மாகாணத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது, சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக. வடக்கு மாகாணத்தோடு நாங்கள் சேர்ந்து இருக்க விரும்பவில்லை என்று கிழக்கில் உள்ளவர்கள் கருதுவதாக ஒரு பொய்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக, இராணுவத்தைக் கொண்டு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி, உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசு முயற்சிக்கிறது'' என்றார் வைகோ. 13 ஆவது சட்டத்திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறார்களே?' என்றார் பிரதமர். ''அதைத் தமிழர்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். அந்த 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கு நீதி வழங்காது'' என்றார் வைகோ. மேலும், ''இப்போது உள்ள சூழ்நிலையில், இலங்கை அரசுதான் தாக்குதல் நடத்திவ வருகிறது- அவர்கள்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு, இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லி இந்தியா வற்புறுத்த வேண்டும்'' என்று வைகோ கேட்டபோது, ''வெளி விவகார அமைச்சருடன் இதுகுறித்து விவாதிக்கிறேன்'' என்றார் பிரதமர். பிரதமரிடம் வைகோ அளித்த கோரிக்கை விண்ணப்பம்: அன்புள்ள டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, வணக்கம். இலங்கை அரசு நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களால், நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருகிறது. அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான தமிழர்கள், தங்களுடைய வீட்டை விட்டு விரட்டப்பட்டு, காடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். மருந்துகள், உணவு இன்றித் தாங்கவொண்ணாக் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ''தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் மறுவாழ்வு'' - என்ற பொருளில், மனித மாண்புகளின் பன்னாட்டுச் சங்கம் (International Association for Human Values)என்ற அமைப்பின் சார்பில், நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், ஏப்ரல் 10,11 ஆகிய நாள்களில் நடைபெற்றது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர் குருஜி அவர்கள், இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதற்கான நல்லெண்ண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும், நார்வே அரசு முன்னின்று செய்தது. தெற்கு ஆசியாவில் நிலவுகின்ற கீழ்காணும் பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 1. இலங்கை அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்த அழைப்பின் பேரில், நானும் இம்மாநாட்டில் பங்கேற்றேன். சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராம்விசார் நேதம் கலந்து கொண்டார். ஏப்ரல் 10 ஆம் நாள் மாநாட்டு நிகழ்வுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி எரிக்கா மான் அவர்கள் தலைமை ஏற்றார். பண்டிட் ரவிசங்கர் குருஜி வரவேற்பு உரை ஆற்றினார். இந்த நிகழ்வில் பங்கேற்றோர்: 1. வைகோ, பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க. இலங்கை அமைதிப் பேச்சுகளுக்கான நார்வே அரசின் சிறப்புத் துhதர் ஜான் ஹேன்ஸ்ஸன் பாவர், சிறப்புரை ஆற்றினார். திரு காலின் ஆர்ச்சர், (பொதுச்செயலாளர், பன்னாட்டு அமைதி மன்றம், ஸ்விட்சர்லாந்து), திரு சிகர்ட் ஃபால்கன்பெர்க் மிக்கெல்சன், பேராசிரியர் ரூன் ஒட்டோசென், (பத்திரிகைக் கல்வித்துறை, ஓஸ்லோ பல்கலைக்கழகம்) ஆகியோர், தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியை எட்டுவதற்கான வழிவகைகள் குறித்த கருத்துகளைத் தெரிவித்தனர். நார்வே அரசின்....அமைச்சர் எரிக் சோல்ஹைம் அவர்களை, ஏப்ரல் 12 ஆம் நாள் நண்பகலில், அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்படவும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவும் பெரும் பங்கு ஆற்றியர் திரு சோல்ஹைம் அவர்கள் ஆவார்கள். அவருடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. நார்வேயில் நடைபெற்ற இந்த அமைதி மாநாடு, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற சண்டையை நிறுத்தவதற்கும், அமைதிப் பேச்சுகளைத் தொடங்குவதற்கும் அழைப்பு விடுத்து உள்ளது. இலங்கை அரசு தொடுத்து வருகின்ற கொடுந் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, அமைதிப்பேச்சுகள் நடைபெறுவதற்கு உரிய சூழ்நிலையைத் தோற்றுவித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு, இந்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களால், தமிழர்கள் எத்தகைய வேதனைகளைஅனுபவித்து வருகின்றனர் என்பதையும், எல்லையற்ற படுகொலைகள், காணாமல் போனவர்கள் குறித்தும் உலக அளவில் செயல்பட்டு வருகின்ற பல அமைப்புகள் வெளியிட்டு உள்ள சில தகவல்களைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்துக்குக் கிடைத்து உள்ள தகவல்கள், (North East Secretariat on Human Rights NESOHR): ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்த வன்முறையில் தப்பவில்லை. அவர்கள் இலங்கை இராணுவத்தால் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைப்பது இல்லை. அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாகத் தெரிவிக்கின்றது. 1997 ஆம் ஆண்டு, செம்மணி என்ற நடத்தில் புதைகுழிகள் தோண்டப்பட்டபோது, அங்கே 400 க்கும் மேற்பட்ட, இளைஞர்கள், குழந்தைகள், பெண்களின் உடல்கள் ஒரே இடத்தில் கிடைத்தது, மேற்கண்ட அறிக்கையை உறுதி செய்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் (United Nationsl Human Rights Commission-UNHRC) கட்டாய வெளியேற்றம் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், ''தங்களுடைய வாழ்வு இடங்கள், சொந்த வீடுகளில் இருந்து மக்களைக் கட்டாயமாக வெளியேற்றுவது, அப்புறப்படுத்துவது என்பது, அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை மறுத்து, பண்பாட்டுச் சிதைக்கின்ற கொடுமை ஆகும்' என்று தெரிவித்து இருக்கிறது. இலங்கையில் ஐந்து இலட்சம் தமிழர்கள் இவ்விதம் தங்களுடைய வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு, சொந்த நாட்டுக்கு உள்ளேயே காடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து உள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. அங்கே தற்காலிகமாக உருவாக்கப்பட்டு உள்ள முகாம்களில், உணவு, மருந்து, குடிதண்ணீர் எதுவுமே இல்லை. வாழ்க்கை என்பது அவர்களுக்கு நரகம்தான். இதில் தப்பிப் பிழைத்தவர்கள், ஒன்றரை இலட்சம் பேர், இந்திய மண்ணில், தமிழகத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சுமார் எட்டு லட்சம்பேர் அகதிகளாக உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் புகலிடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவதற்கும், அங்கே மானத்தோடும், உரிமையோடும் வாழ்வதற்கும் உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும். பச்சிளம் தமிழ்க் குழந்தைகள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து, ஐ.நா. குழந்தைகள் ஆணையம் (UNICEF) 2003 ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ள அறிக்கை நெஞ்சைப் பிழிகிறது. ஐம்பது ஆயிரம் தமிழ்க் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தமிழ் ஈழ மண்ணில் நுhறில் ஒரு குழந்தை தாய்-தந்தையரை இழந்து, அநாதைவிடுதியில் உள்ளது. முன்னுhறில் ஒருகுழந்தை, தந்தை அல்லது தாயை இழந்து இருக்கிறது; எந்தவிதமான சத்து உணவுகளும் குழந்தைகளுக்குக் கிடைப்பது இல்லை; 30 விழுக்காடு பள்ளிக் கட்டடங்கள், இலங்கை இராணுவ குண்டுவீச்சுகளால், இடித்துத் தகர்க்கப்பட்டு விட்டன. இதுதான், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள உண்மை நிலை என்பதை ஐ.நா. அறிக்கை தெளிவுபடுத்துகிறது. உலக வங்கியின் மனிதவளத் துறை, 2005 பிப்ரவரியில் வெளியிட்டு உள்ள வெளியிட்டு உள்ள அறிக்கையில், இலங்கையின் வடக்கு -கிழக்கு பகுதியில் உள்ள குழந்தைகள் 46 விழுக்காடு சத்துக் குறைவுடன் உள்ளதையும், அதேவேளையில், சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள தெற்குப் பகுதியில் இது 29 விழுக்காடாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கை விமானப்படை நடத்தி வருகின்ற குண்டுவீச்சுகள், கொடுந்தாக்குதல்களில், பெருமளவில் குழந்தைகள்தாம் பலியாகின்றனர் என்ற செய்தி, உலகில் அமைதியை விரும்பும் மக்களின் மனங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு: 1. 2005 டிசம்பர் 23 அன்று, இலங்கைக் கடற்படைக் குண்டுவீச்சில் நான்கு பேர் இறந்தனர். அவர்களுள், டிக்ஸன் என்ற மூன்று வயதுக் குழந்தையின் உடல் இரண்டு துண்டாகிக் கிடந்தது. 2. 2005 டிசம்பர் 28 அன்று, யாழ்ப்பாணம்-கொடிகாமம் என்ற இடத்தில், 15 வயதே நிரம்பிய தம்பிராஜா அருளானந்தன் என்ற சிறுவனை, அவனது குடும்பத்தினர் முன்னிலையிலேயே இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது. 3. 2006 ஜனவரி 16 ஆம் நாள், மட்டக்களப்பு, அக்கறைப்பட்டு என்ற இடத்தில், நண்பர்களுடன் வேலைக்குச் சென்று கொண்டு இருந்த கோபாலகிருஷ்ணன் சுரேஷ் என்ற 16 வயது இளைஞன், சுட்டுக் கொல்லப்பட்டான். 4. 2005 டிசம்பர் 7 ஆம் நாள், மட்டக்களப்பில் ஒரு வீட்டுக்கு உள்ளே நுழைந்த கொலையாளிகள், யோகராசா யோகேஸ்வரி என்ற இரண்டு வயதுக் குழந்தையையும், துரைராசவதனி என்ற 18 வயதுப் பெண்ணையும் சுட்டுக் கொன்றனர். 5. 2006 ஜனவரி 7 ஆம் நாள், யாழ்ப்பாணம், நவலடியில், இலங்கை விமானப்படை குண்டுவீசியபோது, சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த சிவராசா ஜெஸிபன் (13) என்ற சிறுவன் கொல்லப்பட்டான். 6. 2006 ஜனவரி 28 ஆம் நாள், தமிழ்செல்வன் என்ற 13 வயதுச் சிறுவனும், சுரேஜா என்ற 14 வயதுச் சிறுமியும், அவர்களுடைய வீட்டில் இருந்தபோது, துணை இராணுவப்படை வீசி எறிந்த குண்டுகளால் கொல்லப்பட்டனர். 7. இவை அனைத்திலும் மிகப் பெரிய கொடுமையாக, 2006 மே 14 ஆம் நாள், செஞ்சோலை என்ற இடத்தில், 61 பச்சிளம் பெண் குழந்தைகள், இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சால், கோரமாகக் கொல்லப்பட்டது, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, வேறு வழி இல்லாமல், தங்கள் வீடுகளில் வசித்துக்கொண்டு இருக்கிற தமிழர்கள், தாங்கள் வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு உள்ளனர். எடுத்துக்காட்டாக, வடக்கு-கிழக்கு பகுதியில் வாழ்கின்ற தமிழர்களுள், 12 விழுக்காட்டினர் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ள மீனவர்கள் ஆவர். ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில், அவர்கள் கடலுக்கு உள்ளே செல்வதை இலங்கைக் கடற்படை தடுத்து வருகிறது. அவர்களது மீன்பிடி வலைகள், படகுகளைத் தகர்த்து அழித்து வருகிறது. வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பட்டினி போட்டுச் சாகடிக்கப்படுகிறார்கள். உணவு,மருந்துகளைக் கொண்டு செல்லக்கூடியஉயிர்நாடியாகத் திகழ்கின்ற, ஏ-9 நெடுஞ்சாலையை,சிங்கள அரசு நீண்ட காலமாக மூடி விட்டது. இன்றைக்கு, உலக நாடுகள் அனைத்தும், இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களையும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதியையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளன. மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர், திருமதி லுயீhயிஸ் ஆர்பர், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பார்ப்பதற்கு, சிங்கள அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்ததால், அங்கேநடைபெறுகின்ற கொடுமைகள் வெட்டவெளிச்சத்துக்கு வந்து விட்டன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுப்பது, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும். 2004 ஆம் ஆண்டு, இலங்கை அரசுடன் இந்தியா இராணுவக்கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள இருந்த நிலையில், என்னுடைய வேண்டுகோளை ஏற்று, அந்தஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் ரத்துச் செய்தீர்கள். ஆயினும், இந்தியக் கடற்படையின் சில அதிகாரிகள், தேவை இல்லாமல், இலங்கை இராணுவத்துக்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளித்து வருகிறோம் என்ற அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். 2007 ஆம் ஆண்டு, மார்ச் 10 ஆம் நாள் நான் தங்களைச் சந்தித்து, தமிழக மக்களிடம் திரட்டப்பட்ட, உணவு, மருந்துகளை, செஞ்சிலுவைச் சங்கம் வழியாக, இலங்கைக்கு அனுப்புவதற்கு உதவ வேண்டும் என்றுவேண்டுகோள் விடுத்தபோது, தாங்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தீர்கள். பின்னர் என்ன காரணத்தாலோ இன்றுவரையிலும் அவை எதுவும் ஈழத்தமிழர்களுக்குச் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், ஈழத்தமிழர்களும் தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் உங்கள் வாயிலின் கதவுகளை நான் தட்டுகிறேன். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, அவர்களுடைய வாழ்வில் விடியல் பிறந்திட, தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு திட்டத்தை வகுக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். அதற்கு முதற்படியாக, ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கின்ற வகையில், இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கி உள்ள ரேடார்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும்,இலங்கைக்கு இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அமைதிப் பேச்சுகளை நடத்தி, ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சிகளுக்கு, உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் தங்களுக்கு நன்றியோடு இருப்பார்கள். |
Thursday, 17 April 2008
பிரதமருடன் வைகோ சந்திப்பு - ஓஸ்லோவில் நடைபெற்ற, தெற்கு ஆசிய அமைதி மாநாடு குறித்தும், அதில் தாம் கலந்து கொண்டது குறித்தும் பிரதமரிடம் எடுத்துக்கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Mr.Manmohan singh says that Indian govt.didn't supply arms&ammunitions to srilankan Govt;
But,His national security advisor.M.K.Narayanan,says India is supplying "DEFENSIVE" weapons to srilankan govt:who is lying?
Post a Comment