"விடுதலைப் புலிகள்" ஏடு
தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்க முற்படுகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (14.04.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 140 ஆவது இதழில் இடம்பெற்றுள்ள முகப்புச் செய்தி:
தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்க முற்படுகின்றன.
நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருண்மிய - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கி வந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கைக் காணக்கூடியதாக உள்ளது.
உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளி விட்டு தமிழினக் கொலையைத் தீவிரப்படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசாக" முத்திரை குத்தும் ஆரம்ப முயற்சிகளில் அனைத்துலக சமூகம் இறங்கியுள்ளது.
எதிர்வரும் யூன் மாதத்தில் சிங்கள அரசுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எடுக்க முயற்சிக்கும் ஒரு நடவடிக்கை, சிங்கள அரசு மீதான ஒரு பொருண்மியத்தடை போன்றே காணப்படுகின்றது.
சிங்கள அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் இருபதினாயிரம் கோடி ரூபா வருமானம், ஒரு இலட்சம் சிங்களவருக்கு வேலை வாய்ப்பையும் கொடுக்கும் ஆடை ஏற்றுமதிக்கான சலுகைகள் மற்றும் கோரல்களை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் காட்டப்படா விட்டால் மேற்குறித்த "பொருண்மியத்தடை" நடவடிக்கைக்கு சிங்கள அரசு உள்ளாகும் என்று ஐரோப்பிய யூனியன் நிபந்தனை விதித்துள்ளது.
ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து, கனடா போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கான பொருண்மிய உதவிகளைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா - பிரித்தானியா போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கான போராயுத வழங்கல்களை நிறுத்தியுள்ளன.
சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் உலக நாடுகளில் முதன்மை இடம் வகிக்கும் ஜப்பான் தனது உதவிகளை மட்டுப்படுத்தியுள்ளது.
சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களை - இனக்கொலையை அம்பலப்படுத்தி அண்மையில் அமெரிக்க அரசு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிக்கை சிங்களப் பேரினவாதிகளை சீற்றத்திற்குள்ளாக்கியது.
சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவரை தனது அலுவலகத்திற்கு அழைத்த சிங்கள வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா அறிக்கையின் விபரங்கள் பொய்யானவை என்று வலியுறுத்தினார். அந்த அறிக்கையை அமெரிக்க அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரைக் கேட்டுக்கொண்டார்.
சந்திப்பை முடித்துக்கொண்டு தூதரகம் திரும்பிய அமெரிக்கத் தூதுவர், பத்திரிகையாளர்களை அழைத்தார். சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கை சரியானது என்று வலியுறுத்திச் சிங்கள அரசின் முகத்தில் கரி பூசியிருந்தார்.
உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களுடன் மோதல் போக்கைச் சிங்கள அரசு தொடர்ந்த படியுள்ளது. இப்போது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் மோதலைத் தொடுத்துள்ளது.
ஐ.நா. சபையின் மனித உரிமைக் கடிதத்தில் ஒரு உறுப்புரிமை நாடாக சிறிலங்கா இருந்து வருகின்றது. இப்போது அந்த உறுப்புரிமையை இழக்கும் நிலையில் சிங்களம் உள்ளது. வரும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகத்திற்கான தேர்தலில் சிறிலங்கா தோல்வியடையப் போகின்றது என்று கொழும்பு வார ஏடொன்று அபாய அறிவிப்புச் செய்துள்ளது.
இவ்விதமாக உலகின் மதிப்பு வாய்ந்த ஜனநாயக நாடுகள் மனித உரிமை அமைப்புக்கள், சிறிலங்கா அரசை தீண்டத்தகாத ஒரு அரசாக ஒதுக்கிவைக்க முற்படும் இந்த வேளையில், மேற்குறித்த நாடுகளுடன் முரண்பாடான உறவுகளைக் கொண்டுள்ள சீனா- பாகிஸ்தான்- ஈரான் போன்ற நாடுகளைச் சிங்கள அரசு தனது இராணுவக் கூட்டாளிகளாக மாற்றி வருகின்றது.
மேலை நாடுகள் விரும்புவது போல மனித உரிமைகளை மதிக்கச் சிங்கள அரசு தயாரில்லை என்ற நிலைப்பாட்டையே கூட்டாளிகளை மாற்றுவதன் மூலம் அது வலியுறுத்த விரும்புகின்றது.
தமிழின அழிப்புப் போரைத் தொடரும் நோக்கில் மேலை நாடுகளுக்கு எதிராகச் சிங்கள அரசு மேற்கொள்ளும் இந்த வெட்டி ஓட்டம் மூலம் சிங்கள அரசு பயன் பெறப் போவதில்லை என்பதை வருங்காலம் நிரூபிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comment:
already my boys -tamil tigers- punishing them?
if the punishment come from other directions,where Mahindha will hide?
Post a Comment