Thursday, 24 April 2008

நெருங்கி வந்து கொண்டிருக்கும் பொருளாதாரச் சுனாமி

உலகில் எரிபொருள் மற்றும் உணவு தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பாரியளவிலான நெருக்கடி நிலை எதிர் காலத்தில் மேலும் மோசமடையலாமென உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அச்சுறுத்தும் விதத்தில் எதிர்வு கூறியிருக்கின்றன. இந்தச் செய்தியானது குக்கிராமங்களில் வறுமை நிலையில் வாழும் அப்பாவி மக்கள் மட்டுமன்றி, நகர்ப்புறங்களில் வாழும் வசதி படைத்த மக்களையும் கூட தலையில் கையை வைக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் உட்பட சகல தரத்தினரையும் கொண்டவர்களதும் பட்ஜட்டில் தினசரி துண்டு விழும் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை காலமும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது வளர்முக நாடுகளை மட்டுமே பாதித்துக் கொண்டிருந்தது. ஆனால், அது இன்று முழு உலகையும் உலுக்கி விட்டுள்ளது.

இன்று மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 117 டொலரையும் தாண்டியுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் எரி பொருளின் விலையை குறைக்குமாறு ஒபெக் அமைப்பிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அமைப்பு அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. முற்றாகவே நிராகரித்து விட்டது. ஈரானிய எரிபொருள் அமைச்சர் குலாம் அசாரி தற்போதைய எரிபொருள் விலை நியாயமானது எனத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன், பலம் வாய்ந்த நாடுகள் கேட்பது போன்று எரி பொருள் விலையை குறைக்க முடியாதெனவும் அவர் மேற்குலகுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.

உலகின் பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களின் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதை சந்தைக்குப் போகும் பாவனையாளர்களின் முகங்களை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இன்றைய பொருளாதார நெருக்கடியானது எமது மக்களை மூச்சுவிட முடியாதபடி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதை அவதானிக்க முடிகிறது. எந்தவொரு காலத்திலும் காணப்படாத பொருளாதார நெருக்கடிக்குள் முழு நாடும் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, உலகில் அரிசியின் விலை கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அவ்வாறான நிலையிலும் எமது நாட்டில் அரிசியின் சில்லறை விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மத்திய வங்கி அறிக்கையில் இந்த இரகசியம் பகிரங்கப்படுத்தப்படாது போனாலும் சந்தைக்குப் போகும் பாவனையாளர்களுக்கு இது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இதனால், ஏற்படக் கூடிய தாக்கமானது எந்தத் தரத்தைச் சார்ந்தவரையும் விட்டு வைக்கப் போவதில்லை. அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புகளுக்கேற்ப மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. அவர்களின் தற்போதைய வருமானம் கூட பணவீக்கம் காரணமாக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இன்று எமது நாட்டில் அரிசி யுத்தமொன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. இன நெருக்கடியால் உருவான யுத்தத்தால் ஏற்பட்ட தாக்கத்தைவிடவும் மோசமான தாக்கம் இந்த அரிசி யுத்தத்தால் ஏற்பட்டுள்ளது. அரிசிக்கு உத்தரவாத விலையை அரசாங்கம் பிரகடனப்படுத்திய போதிலும் சந்தையில் அரிசியைக் காண முடியவில்லை. தட்டுப்பாடு இல்லை என்கிறது அரசாங்கம். ஆனால், அரிசியில் தன்னிறைவு கண்ட நாட்டில் இன்று அரிசிக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மொத்த விலையை உத்தரவாதப்படுத்தாமல் சில்லறை விலையை மட்டும் உத்தரவாதப்படுத்தியிருப்பதன் மூலம் அரசாங்கம் யாரை ஏமாற்றப்பார்க்கின்றது? கொழும்பில் அரிசி மொத்த வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில்லறை வியாபாரிகள் கொழும்புக்கு வந்துவிட்டு வெறுங்கையுடன் திரும்புகின்றனர். நெல் ஆலை உரிமையாளர்கள் மொத்த விலையை நிர்ணயிப்பதில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சில்லறை உத்தரவாத விலைக்கு சமாந்தரமாக மொத்த விலையை நிர்ணயித்தால் பாரிய நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தினதும் வர்த்தக சமூகத்தினதும் இந்த இழுபறி நிலை காரணமாக பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன சிறந்த பொருளாதார நிபுணராவார். அவர் எதிர்க் கட்சியிலிருக்கும் போது காண்பித்த பொருளாதார புள்ளி விபரங்களும் இன்று கூறும் புள்ளி விபரங்களும் முற்றிலும் மாறுபட்டவையாகவே உள்ளன. அரசாங்கத்தையும் தன்னையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் கூறும் புள்ளிவிபரங்கள் யதார்த்தத்துக்கு ஒவ்வாதவையாகவே நோக்கக்கூடியதாகவுள்ளது. அரிசி மட்டுமன்றி, கோதுமை மா, பால் மா, எரிபொருள் போன்றவற்றின் விலைகள் அடுத்த வாரமாகும் போது உலக சந்தை நிலைவரத்தைக் காரணம் காட்டி மீண்டுமொரு தடவை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். அப்போது அரசாங்கத்தின் இந்த உத்தரவாத விலைப் பிரகடனத்தின் கதி என்னவாக அமையப்போகின்றது. மக்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு ஏமாறப்போகிறார்கள் என்ற கேள்வியுடன் யுத்தத்தால் செத்து மடிபவர்களை விட பட்டினியால் சாகப் போகிறவர்கள் எத்தனை வீதத்தால் அதிகரிக்கப்போகின்றனர் என்பதையும் கேட்டு வைக்கின்றோம்.


No comments: