Thursday, 24 April 2008

பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை

இலங்கை அரசாங்கமும் அதன் முகவரமைப்புகளும் தமது இராஜதந்திர தொடர்பாடல்களை அதிகளவுக்கு பயன்படுத்தி கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சித்த போதும் பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ரோன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு ஆதரவாக எவராவது பேசினால் அவர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவானவர்களென்றோ அல்லது பயங்கரவாதியென்றோ பூதாகரமாக்கி காட்டும் வழக்கத்தை இராஜதந்திரிகள் வழமையான பழக்கமாக கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் தமிழ் மன்ற அதிகாரி ஒருவர் ரி.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஹரோவில் சனிக்கிழமை இடம்பெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ரோன் லண்டன் தமிழர்களினதும் பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தினதும் ஆதரவைக் கோரியிருந்தார்.

கடந்தவாரம் இடம்பெற்ற கூட்டத்தை பிரிட்டிஷ் தமிழ் மன்றமும் உள்ளூர் தொழில்கட்சி உறுப்பினர் தயா இடைக்காடரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை, பிரிட்டிஷ் தமிழ் மன்றம் பிரிட்டனிலுள்ள புலிகளின் பிரதான முன்னணி அமைப்புகளில் ஒன்று என்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

`கென் லிவிங்ஸ்ரோன் தமிழ் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதில்லை. ஹரோ கூட்டத்தில் புலிகள் கலந்துகொள்ளவில்லை. பிரிட்டிஷ் தமிழ் மன்றம் ஒரு அரசியல் அமைப்பாகும். பிரிட்டிஷ் வாழ்க்கை முறைக்குள் பிரவேசிக்குமாறு பிரிட்டிஷ் தமிழர்களை இந்த அமைப்பு எப்போதுமே ஊக்குவித்து வருகிறது என்று லண்டனிலுள்ள செயற்பாட்டாளர் கந்தையா இராஜ மனோகரன் கூறியுள்ளார்.

No comments: