Wednesday, 9 April 2008

நான் பேசியதில் என்ன தவறு? : கேட்கிறார் ரஜினி

“ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னடர்கள் மனம் புண்படும்படியாக நான் பேசவில்லை. கன்னடர்களை இழிவாக பேசும் எண்ணம் எனக்கில்லை. நான் பேசியது தவறு என்று மனசாட்சியுடன் சொன்னால், நான் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன்,” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 4ம் தேதி தமிழ்த் திரையுலகத்தினரின் சார்பில், சென்னையில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகத்தினர் எதிர்ப்பதையும் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் ரஜினி பேசிய பேச்சுக்கு கர்நாடகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ரஜினியின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனியார் `டிவி’ ஒன்றிற்கு ரஜினி பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக, சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு நான் பேசும் போது கன்னடர்கள் மனம் புண்படும் படி ஏதும்பேசவில்லை. ஐந்தரை கோடி கன்னடர்களை இழிவாக பேசும் எண்ணம் எனக்கில்லை. ஒகேனக்கலை சுற்றியுள்ள எல்லைகள் தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இப்படியிருக்கும் போது இருமாநில மக்களும் அமைதியாக வாழ விடாமல் ஒகேனக்கல் விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்க வேண் டாமா? என்று தான் கேட்டேன். திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்து தான் இதனை கூறினேன். கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்த அளவுக்கு நான் முட்டாள் அல்ல. நான் பேசியது தவறு என்றும், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

மன்னிப்பு கேட்காவிட்டால் எனது படங்களை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனால், எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால் கன்னட ரசிகர்கள் தான் வேதனையடைவார்கள். நான் சென்னையில் பேசிய பேச்சில் கர்நாடக மக்களை புண்படுத்தியதாக கன்னட திரையுலகின் பர்வதம்மாள் ராஜ்குமார், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், அஸ்வத் போன்ற நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் நான் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்.

ஐந்தரை கோடி கன்னடர்களை நான் உதைப்பேன் என்று கூறியதாக எனக்கு எதிராக திட்டமிட்டு சிலர் தீய எண்ணத்தோடு பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை நினைத்து வேதனைப்படுகிறேன். இத்தோடு இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறேன். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

ஜெயமாலா எதிர்ப்பு: சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் ரஜினியின் பேச்சுக்கு பெங்களூரில் கன்னட நடிகை ஜெயமாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ரஜினி பேசிய பேச்சால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று ரஜினி கூறி, மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும். சென்னையில் ரஜினி கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி விரும்பினால் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதே பதிலை கன்னடப் படத் தயாரிப்பாளர் கோவிந்தும் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் இப்படி பேசினாலும் ரஜினி குறித்து தனிப்பட்ட முறையில் அங்குள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் வெளிப்படையாக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் பெங்களூரில் உள்ள தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: