Thursday, 24 April 2008

அரிசி விலை தொடர்ச்சியாக அதிகரிப்பதால் வறுமையின் பிடிக்குள் மெதுவாக நகரும் ஆசியா

ஆசியா முழுவதிலும் உணவுப்பொருட்களின் விலை துரிதகதியில் உயர்ந்துகொண்டிருப்பதனால், பல அரசாங்கங்கள் எதிர்காலத்தில் உணவுப்பற்றாக்குறையும், அதனால் சமூககொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் உள்நாட்டில் அரிசிவிலையை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் பொருட்டுத் தலையிட வேண்டியுள்ளது.

இப்பிராந்தியம் முழுவதும் அரிசியின் விலை வானளாவ உயர்ந்துள்ளதனால் அதிகளவிலான மக்கள் படிப்படியாக வறுமையின் பிடிக்குள் சிக்குகின்றனர்.

ஐ.நா.வின் உலக உணவுத்திட்டத்தின் பிராந்திய பேச்சாளர் போல்றிஸ்லே ஐ.பி.எஸ்.ஸிற்கு கூறியதாவது "ஆசியா முழுவதிற்குமான கடந்த தசாப்தங்களுக்கான பொருளாதார அபூர்வ முன்னேற்றத்தை உயர்ந்துவரும் உணவுப்பொருட்களின் விலை அச்சுறுத்துகிறது. இது ஒரு அமைதியான நெருக்கடி. மௌனமான இந்த நெருக்கடி முழுப்பிராந்தியத்தையுமே சிதைக்கும் சுனாமி, அவலங்கள் நிறைந்த நிலையை உருவாக்குகிறது".

இப்பிராந்தியத்தின் பிரதான உணவான அரிசி தான் முக்கிய வருட ஆரம்பத்திலிருந்து அதனால் விலை வாரம்தோறும் உயர்ந்து வருகிறது. பல அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்கி உள்ளூர் விலைகளை கட்டுப்படுத்தி வைத்துள்ளன.

அச்சமிகுதியினால் வாங்குதல், கட்டுப்பாடுகளை உருவாக்குதல், பதுக்குதல் ஆகியவை பயங்கரமான முறையில் அதிகரித்துள்ளன.

இது பல ஆசிய நாடுகளில் அந்தத்தானிய வகைகள் கிடைக்காமற்போகலாம் என்ற அச்சத்தினாலேயே இடம்பெறுகின்றன. அரசாங்கங்களும் அமைதி பேணுமாறு கோரிக்கை விடுக்கின்றன. பங்களாதேசிலும், தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் அச்ச மேலீட்டினால் அரிசி பற்றாக்குறை ஏற்படக்கூடுமென எண்ணி அரிசி வாங்கி சேகரிக்கப்படுகிறது.

உதவும் ஏஜென்சிகளுக்கும், உலக உணவுத்திட்டமும் வறியவர்களுக்காகக் கவலையடைகின்றன. இந்த நிலை தொடருமாயின் தாங்கள் அளிக்கும் உணவுக்கான உதவியில் வெட்டுக்கள் மேற்கொள்ள வேண்டிவரும் என விசனமடைகின்றனர்.

ஐ.பி.எஸ்.ஸிற்கு உணவு உதவி நிபுணர் ஜோன்சமுவேல் கூறியதாவது, "ஆசியாவின் வறுமை மிகுந்த நாடுகளில் போஷாக்கின்மை அதிகரிக்கப்போகின்றது."

உலக உணவுத்திட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே பசியினாலும், பஞ்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை இருமடங்காகியுள்ளது. நேபாளத்தில் உணவுப்பொருட்களின் விலை குறைவடையாதிருப்பின் பட்டினியை எதிர்நோக்கும் மக்களின் தொகை 8 மில்லியன் ஆக கடந்த ஆறு மாதகாலத்தில் உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு மக்கட்தொகையின் மூன்றில் ஒரு பகுதியாகும். ஆசியா முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருவதனால் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமிகுதியினால் கொந்தளிப்பு நிலையும் உருவாகி வருகிறது.

பங்களாதேஷில் கடந்த இரு வாரங்களாக அரச கடைகளுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் நீண்ட வரிசைகளில் மக்கள் அரசினால் மானியம் வழங்கப்பட்ட 5 கிலோ அரிசி, தானியங்களை வாங்குவதற்குக் காத்து நிற்கின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன.

பிலிப்பைன்ஸிலிருந்து பாகிஸ்தான் வரையும் சீனா தொடக்கம் இந்தோனேசியா வரையும் தானியம், பசி ஆகியவற்றுக்கான அச்சம் தான். றிஸ்லே கூறுவதாவது"உலக சந்தையில் பொருட்களின் விலைகள் உயர்வடைய ஆசியா முழுவதிலும் பல மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையும், பட்டினியையும் எதிர்நோக்குவர்".

தாய்லாந்தில் அரசினால் உதவப்பட்ட மலிவான அரிசிப் பைக்கற்றுகள் விற்கப்படுகின்றன. ஆனால், பாரிய சுப்பர் மாக்கெற்றுகள் அச்சத்தினால் மக்கள் அரிசியை வாங்குவதைக் கட்டுப்படுத்த 5 கிலோ உள்ள அரிசிப் பைக்கற்றுகள் ஒவ்வொருவருக்கும் வழங்குகின்றன.

தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் மிங்குவான் சங்குவான் எல்லா அரிசி சில்லறை விற்பனையிலும் அடுத்த வாரம் தொடக்கம் 10 வீத கழிவைப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அவர் சிரேஷ்ட அதிகாரிகள் , அரிசி ஆலை சொந்தக்காரர்கள் பைக்கற் பண்ணும் கொம்பனிகள் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் இரண்டு மாதங்களின் பின் முடிவுக்கு வரும். ஏனெனில், புதிய அறுவடையில் அதிகளவு அரிசி கிடைக்கும் என தாய் அரிசி ஆலைச் சொந்தக்காரர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஐ.நா.வின் அபிவிருத்திக் கொள்கை நிபுணர் ஷமிக்கா சிறிமன்னே கூறுவதாவது; "இந்த அரிசி விலை உயர்வினால் அதிகமாகப் பாதிக்கப்படுவது வறிய மக்கள் தான் . ஏனெனில் அவர்களது உழைப்பு முழுவதையும் உணவு எடுத்துவிடுவதனால் மேசையில் வட்டில்களில் உணவைப் பரிமாறும் பெண்களே அதிக பொறுப்புள்ளவர்களாக உள்ளனர்.

தொழிலாளர் வர்க்கத்தின் வறிய பகுதியினரின் வருமானத்தையே பணவீக்கம் அதிகம் பாதிக்கிறது. ஏனெனில் அவர்கள் இருமடங்கு பணத்தை உணவுக்குக் கொடுக்கும் அதேவேளையில் அவர்களது வாங்கும் தகுதி குறைவடைந்துள்ளது. ஆகவே, செலவழிப்பதற்கான பணத்தொகை அவர்களிடம் குறைவாகவே உள்ளது" எனவும் அவர் கூறுகிறார்.

உலக உணவு நிறுவனத்தைச் சேர்ந்த றிஸ்லே கூறுவதாவது;

ஆசியாவிலுள்ள பட்டினவாசிகளே அண்மைக்காலமாக உணவுக்கான விலை அதிகரிப்பினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அநேகமான ஆசிய நாட்டு அரசுகளை அச்சமடைய வைத்துள்ளது இதுதான். ஏனெனில் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள் சமூக , அரசியல் கொந்தளிப்பை உருவாக்கிவிடக்கூடும்.

அக்ஷன் எயிட் சாமுவேல் கூறுவதாவது;

ஹெயிற்றியில் அண்மையில் நடைபெற்ற உணவுக்கான கலவரங்கள் எல்லா ஆசிய அரசுகளது கண்களையும் திறக்க வைத்துள்ளன. கட்டுப்பாடான விலைகளை நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து இங்கும் கலவரங்கள் வெடிக்கலாம். ஒரு சமூக நெருக்கடி ஒன்று உருவாகி பாரிய அரசியற் பிரச்சினையாக வெடிக்க இடமுண்டு. ஆசிய ஜனநாயக நாடுகளில் எதிர்வரும் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் , இந்தோனேசியா , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே சமூக கொந்தளிப்பும் அதனால் வீதிகளிலும் இந்நிலை எடுத்துச் செல்லப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளன. மார்ச்சில் மலேசியாவில் கூட்டணி அரசாங்கத்திற்கேற்பட்ட பாரிய பின்னடைவு உயர்ந்து வந்த உணவு ,எரிபொருள் விலைகளால் ஏற்பட்டது என ஆய்வுகள் காட்டுகின்றன.

மிகக் கட்டுப்பாடான சமூகங்களையுடைய சீனாவிலும், வியட்நாமிலும் உயர்ந்து செல்லும் உணவின் விலைகள் , தொழில்வளம் குறைதல் ஆகிய காரணங்களினால் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் சீனாவில் நகரப் பகுதிகளில் அடிக்கடி சிறுசிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன எனத் தன்னை அடையாளம் காட்டாத மேற்கு இராஜதந்திரி ஒருவர் கூறுகிறார்.

சீனாவில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அரசசார்பற்ற நிறுவனமொன்றின் பேச்சாளர் ஜி.ஒ.பி.றே குறொதோல் கூறுவதாவது: "மோசமாகிவரும் பண வீக்கத்தினால் மிகப்பலமான தொழிலாளர்களது கிளர்ச்சியொன்று உருவாவதற்கு இடமுண்டு."

பல நிபுணர்கள் அரிசிக்கான கிளர்ச்சி ஆரம்பிக்க ஆயத்தமாக உள்ளது. கடந்த பத்து வருடங்களாக அரிசிக்கான கேள்வி வழங்குதலிலிருந்து பாரியளவு அதிகரித்து வந்துள்ளது. எனவே சர்வதேச ரீதியில் அரிசியின் அளவு குறைந்துள்ளது. எனவே பல நிபுணர்களின் கருத்துப்படி நெல் உற்பத்திக்கு அதிகளவு முதலீடு செய்யப்பட வேண்டும்.

சமுவேல் கூறுவதாவது: "பல ஆண்டுகளாக இந்த நெருக்கடி தொடர்ந்து வருகிறது. இப்பிராந்தியத்தில் திருப்திகரமான பொருளாதார வளர்ச்சி காணப்படினும், இது தொழில், சேவை ஆகியவற்றிலேயே காணப்படுகின்றன. உண்மையில், விவசாயத்திற்கான முதலீடு வளர்ச்சிகாணாது, அருகியே வந்துள்ளது."

"ஆசிய நாடுகளில் விவசாயத்திற்கு உறுதியான முதலீடு செய்யப்படாவிடின், விலையுயர்வு தீர்க்கமுடியாத பிரச்சினையாகிவிடும். இதனுள் நீர்ப்பாசனம், உறுதியான நீர் நிர்வாகம், நல்ல சேமித்துவைக்கும் வசதிகள், மென்மையான கடனுதவிகள், நல்ல உறுதியான சந்தைப்படுத்தும் விநியோக முறைகள், நில சீர்திருத்தம் ஆகியனவும் அடங்கும்" எனவும் அவர் கூறினார்.

- ஐ.பி.எஸ். -

No comments: