Thursday, 24 April 2008

கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவியை விடுதலை செய்யுமாறு கடத்தப்பட்ட பெண்ணின் கணவரான, மோகனதாஸ் உருக்கமான வேண்டுகோள்

நீர்கொழும்பு அஸரப்பா வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவியை விடுதலை செய்யுமாறு கடத்தப்பட்ட பெண்ணின் கணவரான, மோகனதாஸ் வயது 38, என்பவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புங்குடுதீவைப் பிறப்பிடமாக கொண்ட விஜயராணி வயது34, என்ற குடும்பப் பெண்ணே வெள்ளைவேனில் வந்த நபர்களால் பலவந்தமாக ஏற்றப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டவர் தொடர்பாக எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி கணவரான மோகனதாஸ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், நானும் எனது மனைவியும் நீர்கொழும்பில் பிரதான வீதியில் கடையொன்றை நடத்தி வருகிறோம்.

கடையின் பின்பகுதியில் எமது வீடு உள்ளது. எமது கடையில் பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். நான் கடந்த 15வருடங்களுக்கும் மேலாக நீர்கொழும்பில் வசித்து வருகிறேன்.

எனது மனைவியை திருமணம் செய்தபின் அவரும் என்னுடன் கடந்த எட்டு வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில அப்பாவிகளான எங்கள் இருவரையும் இனந்தெரியாத நபர்கள் கடத்த முயற்சித்த வேளையில் நான் கூக்குரலிட்டு அடுத்தவர்களை உதவிக்கு அழைப்பதற்கிடையி;ல் மனைவியை பலாத்காரமாக வானில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

எனது மனைவி ஆஸ்மா மற்றும் தைரொய்டினால் பாதிக்கப்பட்ட நோயாளியாவார். அவர் தினமும் மருந்து குடிக்க வேண்டிய நிலையில் உள்ளார். எனது மனைவி கடத்தப்பட்டுள்ளதால் நானும் உடல், உள ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளேன்.

தயவு செய்து எனது மனைவியை கடத்திச் சென்றவர்கள் அவருக்கு எந்தவித தீங்கையும் விளைவிக்காமல் விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். இதேவேளை நீர்கொழும்பு காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

No comments: