ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை கன்னட அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து சென்னையில் திரையுலகின் சார்பில் பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரஜினிகாந்த் முதல் சாதாரண நடிகர், நடிகைகள் வரை பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும் ஆசின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.
வழுக்கி விழுந்த மோனிகா!:
இந்த நோட்டீஸுக்கு பலர் பதிலளித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் விதம் விதமான காரணங்களை அந்த பதிலில் தெரிவித்துள்ளனராம்.
உண்ணாவிரத நாளின்போது குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், அதனால் கலந்து கொள்ள முடியவில்லை என்று 'சிலந்தி' புகழ் நடிகை மோனிகா காரணம் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வர முடியவில்லை என ரேவதி, சிம்ரன், பத்மப்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலர் காரணம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கோபிகாவும், ஆசினும் மட்டும் இதுவரை விளக்கக் கடிதம் தரவில்லையாம். இவர்களில் கோபிகா கிட்டத்தட்ட 'ரிடையர்ட் கேஸ்'. ஆசினும் இந்திப் பக்கம் முழுமையாகத் தாவி விட்டார். எனவேதான் விளக்கம் தரவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து விளக்கம் தராத ஆசின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தலைவர் சரத்குமார் ஊரில் இல்லை. அவர் வந்ததும், உண்ணாவிரதத்திற்கு வராதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
ஆசின் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அவர் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்போம் என்றார் ராதாரவி.

No comments:
Post a Comment