Thursday, 24 April 2008

தமிழகம் முழுவதும் 5,440 கிராமங்களில் இணையதள சேவை மையங்கள் - மு.கருணாநிதி

காஞ்சிபுரம், ஏப். 23 - தமிழகம் முழுவதும் 5,440 கிராமங்களில் இணையதள சேவை மையங்கள் அமைக்கப்பட்டு கணினி மூலம் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெற ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

சுங்குவார்சத்திரத்தில் 'டெல்' நிறுவனத்தின் புதிய லேப்டாப் கணினி உற்பத்தியை தொடங்கி வைத்து அவர் பேசியது: நாட்டிலேயே தமிழகம்தான் அன்னிய முதலீட்டுக்கு சிறந்த இடமாகத் திகழ்கிறது. இதற்கு தமிழக அரசு அளித்து வரும் ஆதரவும், சிறந்த கட்டமைப்பு வசதிகளுமே காரணம்.

கணினிமயமாக்கத்தின் பயன்களை பொதுமக்கள் அனைவரும் பெறும் வகையில் தொடங்கப்பட உள்ள இணையதள சேவை மையங்களில் பொதுமக்கள் எவர் வேண்டுமானாலும் சென்று தங்களுக்குத் தேவையான சிட்டா நகல், பதிவுச் சான்று போன்றவற்றை பெறலாம். வரி செலுத்துதல், ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளையும் பெறலாம். கணினியின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டே கடந்த 1999-2000-ம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கணினிக் கல்வியை அறிமுகம் செய்தோம்.

தற்போது 1,880 அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஸ்ரீபெரும்புதூர் சர்வதேச அளவில் மோட்டார் மற்றும் எலெக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள் உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 13 பெரிய நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் ரூ.17,583 கோடி முதலீடும், 1.42 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிட்டியுள்ளது.

சீனாவில் ஆயிரத்தில் 80 பேரும், இந்தியாவில் ஆயிரத்தில் 22 பேர் மட்டுமே கணினியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை வருங்காலத்தில் மாறக்கூடும். டெல் கணினி நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் உற்பத்தி பிரிவை தங்களின் உலக முதன்மை உற்பத்தித் தளமாக மாற்றிக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் கருணாநிதி.

No comments: