கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம், மூன்று கட்டங்களாக நடக்கிறது. இதில் பாஜக போட்டியிடவுள்ள 136 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. தற்போது எம்.எல்.ஏவாக உள்ள 44 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர் எதியூரப்பா, சிகாரிபுரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
தற்போது எம்.எல்.ஏவாக உள்ள ஆறு பேருக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சியில் புதிதாக சேர்ந்த ஜி.டி.தேவகவுடா, பச்சேகவுடா, மாஜி போலீஸ் அதிகாரி ரேவண்ணா, பசவராஜ் பொம்மை, ஜவாலி, ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கட்சியில் நீண்ட நாட்களாக இருந்துவரும் விசுவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கர்நாடக பாஜவில் எழுந்துள்ளது.
போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி கோஷ்டியினர் கட்சியின் மாநில தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் மூலம் மூத்த தலைவர்களான எதியூரப்பா, சதானந்த கவுடா, அனந்த குமார் ஆகியோர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர் என அவர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடக பாஜகவில் எதியூரப்பாவும் அனந்தகுமாரும் தனித்தனியே கோஷ்டி அரசியல் நடத்தி வருகின்றனர். ஆனால், இம் முறை சீட்களை தங்களது ஆதரவாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வகையில் இருவரும் 'கிவ் அண்ட் டேக்' பாலிசி்க்கு மாறியுள்ளனர்.
எதியூரப்பாவின் ஆதரவாளருக்கு ஒரு இடம் தந்தால் இன்னொரு இடம் அனந்தகுமார் ஆதரவாளருக்கு தரப்படுகிறது. இந்த வகையில் இருவருமே அதிகபட்ச சீட்களை ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
கட்சியின் மாநிலத் தலைவர் சதானந்த கெளடாவின் ஆதரவாளர்களுக்கும் ஓரளவுக்கு இடங்கள் தரப்பட்டுவிட்டதால் அவரும் அமைதியாகிவிட்டார்.
பெங்களூர் நகரைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் அசோக்கின் ஆதரவாளர்கள், உறவினர்கள் அதிக இடங்களைப் பிடித்துவிட்டனர்.
ஆனால், இந்த நால்வரின் ஆதரவு இல்லாத பாஜகவினருக்கு சீட் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
பாஜக எம்பி ராஜினாமா:
இந் நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் தரப்படாததால் தும்கூர் தொகுதி பாஜக எம்பி மல்லிகார்ஜூனையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தும்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை அவர் அதிருப்தி வேட்பாளர்களாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment