கடந்த ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்றபிறகு முதன்முறையாக நேற்று அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். பிரேசில், மெக்சிகோ, சிலி ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணத்தை பிரதீபா மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று இரவு போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு பிரதீபா வந்து சேர்ந்தார். அவரை போர்ச்சுகல் வெளிநாட்டு அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தனது பயத்தின் முதற்கட்டமாக இன்று பிரேசில் போய்ச் சேரும் பிரதீபா பாட்டீல் அங்கு 16ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சாவோ பாலோ, ரியோடி ஜெனீரோ, பிரேசிலியா ஆகிய நகரங்களுக்கு அவர் செல்கிறார்.
16ம் தேதி முதல் 20ம் தேதி அவர் மெக்சிகோவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
20ம் தேதி முதல் 23ம் தேதி வரை சிலி நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார் பிரதீபா பாட்டீல்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது ஒவ்வொரு நாட்டுடனும் தலா 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
கனிமொழியும் ..
குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி, மத்திய மரபுசாரா எரிசக்தி துறை இணை அமைச்சர் விலாஸ் முட்டம்வார், எம்பிக்கள் நந்தகிஷோர் சவுகான், மாபெல்ரி பெல்லோ ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து பிரதீபாவுடன் கிளம்பிய கனிமொழியை அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு, டெல்லிக்கான தமிழக பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment