Sunday, 13 April 2008

கர்நாடகம் வருகிறது கோவா மதுபானம்: தேர்தல் ஆணையம் கவலை


தில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி (நடுவில்). உடன் தேர்தல் ஆணையர்கள் நவீன் பி. சாவ்லா (இடது), எஸ்.ஒய்.குரேஷி (வலது).

புது தில்லி, ஏப். 12: அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகத்துக்கு கோவாவில் இருந்து மதுபானம் அதிகளவில் அனுப்பப்படவுள்ளதாக வந்த தகவலால் தேர்தல் ஆணையம் கவலை அடைந்துள்ளது.

கோவாவில் இருந்து ஏராளமான அளவில் மதுபானம் கர்நாடகத்துக்கு வருவது குறித்து கவனமுடன் இருக்குமாறு கர்நாடக மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தை ஒட்டியுள்ள கோவா மாநிலத்தில் இருக்கும் மதுபான ஆலைகள் இரவு பகலாக இயங்கி கூடுதல் மது உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக சில அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார் வந்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி நிருபர்களிடம் கூறினார்.

கர்நாடகத்தில் 3 கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் தேர்தல் பார்வையாளர்களிடம் பேசிய பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அந்த மாநிலத்தில் 57.72 சதவீத வாக்காளர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர் மற்றும் சில பகுதிகளில் இந்த அடையாள அட்டை மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை வழங்கும்பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. 1000 வாகனங்களில் சென்று அதிகாரிகள் இந்த அட்டையை வழங்குகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தபால் மூலமாக வாக்களிக்கும் முறையில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்றும் கோபாலசுவாமி கூறினார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே இத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

No comments: