Thursday, 3 April 2008

சிகரெட்டுக்கு சீனாவில் மீண்டும் கடும் தடை: மே மாதம் அமல்.

சிகரெட்டுக்கு தடை போட்டு அதை அமல்படுத்த முடியாமல் திணறும் சீனா, அடுத்த மாதத்தில் இருந்து கடும் தடையை அமல்படுத்த உள்ளது. உலகில் சிகரெட் பிடிப்போர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, சீனாவில் உள்ளனர்; சமீபத்தில் எடுத்த கணக்குப்படி, 35 கோடி பேர் சீனாவில் சிகரெட் பிடிக்கின்றனர். பிஜீங் உட்பட, 150 நககரங்களில் 1995 முதல் , சிகரெட் பிடிக்க கட்டுப்பாடுகள் உள்ளன. தடை இருந்தாலும், அதை அமல்படுத்த முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர். சீனர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது சிகரெட். இரு நண்பர்கள் சந்தித்து பேசிக்கொண்டால், முதலில் `பற்ற’ வைத்துக்கொள்வர்; லஞ்சம் தருவதற்கு கூட, சிகரெட் தான் அதிகம் பயன்படுகிறது; போலீஸ் முதல், எல்லா துறைகளிலும், விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்களை லஞ்சமாக பெறுவது இப்போதும் உள்ளது. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்கள் மா சே துங், டெங் ஜியோபிங் போன்றோர் `சங்கிலித்தொடர்’ சிகரெட் பிரியர்கள். மா சே துங் விரும்பிப்புகைத்தது `சோங்குவா’ பிராண்டு சிகரெட்; `பாண்டா’ பிராண்டு சிகரெட்டை டெங் பிடித்துவந்தார். சீனாவில், இரண்டு லட்சம் கோடி சிகரெட்கள் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை ஆகின்றன. 20 சிகரெட் கொண்ட பாக்கெட்டின் குறைந்தபட்ச விலை எட்டு ரூபாய். இந்தியாவை போலவே, சீனாவிலும், சிகரெட் பாக்கெட் மீது எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. சிகரெட் பிடிப்பதால், உலகில்ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர்; இன்னும் 12 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் வரும் 2010 ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. அதற்குள், நாடு முழுவதும் சிகரெட் தடையை முழுமையாக அமலாக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. `இது நடைமுறை சாத்தியமல்ல; வெளிநாட்டினர் சிகரெட் பிடிக்கவே விரும்புவர்.நாங்கள் தடுக்க முடியாது’ என்று ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. `அடுத்த மாதம் முதல் புதிய தடை அமலாகிறது; தடை செய்யப்பட்ட பொது இடங்களில், சிகரெட் பிடித்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்; ஒலிம்பிக்குக்கு வரும் வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்’ என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கியூ டாலின் கூறினார்.

No comments: