Wednesday, 23 April 2008

ஐ.நாவின் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு கொண்டு வரும் சூழச்சி:

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களை கொண்டு வரும் சூழச்சியில் சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டதாக இலங்கை சட்டமா அதிபர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழுவின் பார்வையாளர் பணியில் இருந்து சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்கள் விலகியமையானது அந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியே என சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.

தாம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் செயற்படுத்த தவறியமையால் தமது பணிகள் பாதிக்கப்பட்டதாக சர்வதேச சுயாதீன அறங்கூறுனர் குழு அண்மையில் அறிவித்தனர். அத்துடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை தொடர்பான கண்காணிப்பு குழு சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்லை எனவும் இதனால் இலங்கையில் பணியில் இருந்து தாம் விலகி கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சர்வதேச சுயாதீன அறங்கூறனர் குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ளனர், இவர்கள் 10 சதவீதததிற்கும் குறைவாகவே ஆணைக்குழுவின் விசாரணைகள் முன் சமூகமளித்திருந்தாக சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் போது சர்வதேச அறங்கூறுனர்கள் அவர்களது உதவியாளர்களை அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் மனித உரிமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை அவர்கள் விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

சர்வதேச சுயாதீன காண்காணிப்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அல்லது வேறு சர்வதேச அமைப்புகளின் கூட்டங்கள் நடைபெறும் தருவாயில் வெளியிடப்படுவது குறித்து சட்டமா அதிபர் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. இதனால் இவற்றை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேவை என்கிற கருத்தை சர்வதேசத்தின் மத்தியில் உறுதிப்படுத்துவதே அந்த குழுவினரின் எதிர்பார்ப்பு எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் ஓய்வுபெற்ற நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன அறங்கூறுனர் குழு இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயன்ற ஒரு குழுவாக இலங்கை அரசாங்கம் கருதி அதனை கண்டிப்பதாகவும் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments: