Friday, 25 April 2008

நிலக்கண்ணிவெடி மீட்பாளருடைய வாழ்க்கையில் ஒருநாள்

- துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

நிலக்கண்ணி வெடிகளை தடைசெய்வதற்கான சர்வதேச பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணி வெடி பாதிப்பினால் அல்லலுறுவதாகவும், மேலும் இந்த நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய முடியாத பல நாடுகள் காணப்படுவதாகவும் சர்வதேச நிலக்கண்ணி வெடி அமைப்பு தெரிவிக்கின்றது.153 நாடுகள் நிலக்கண்ணி வெடி தடை செய்யப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் 40 நாடுகள் நிலக்கண்ணி வெடி தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. வருடாந்தம் 15,000 பேருக்கு மேல் நிலக்கண்ணி வெடிகளினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வேதனையுறுகின்றனர்.

1990களின் ஆரம்ப கட்டத்தில் 25,000 பேருக்கும் அதிகமானோர் கண்ணி வெடித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.160 மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் உலகம் முழுவதும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.2006 ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணி வெடி தடுப்பு தினம் முதல் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

"உலகில் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பொதுமக்கள் இன்னமும் நிலக்கண்ணி வெடி மற்றும் யுத்த எச்சங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பீதியில் பீடிக்கப்பட்டுள்ளனர்" என ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்."ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மனித உயிர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது" "மக்களுடைய அன்றாட வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்துள்ளன" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலக்கண்ணி வெடிகளின் மூலம் நிலம், பாதை மற்றும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேபாள மக்கள் கண்ணி வெடிகளினால் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேபாளத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இயன் மார்டீன் தெரிவித்துள்ளார்.விரிவான வகையில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் எனவும், போர் எச்சங்களினால் உயிர்ச் சேதங்களோ அல்லது உடல் ஊனங்களோ ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த வருடம், ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது இலங்கையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மில்லியன் கணக்கான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் பல்லாயிரக் கணக்கான கண்ணி வெடிகள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன. எனினும், வடக்கு கிழக்கில் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கக் தொடங்கியதுடன் யுத்தகளத்தில் உள்ள தரப்பினர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்தனர். இலங்கை ஒட்டோவா உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. யுத்தத்தின் எச்சங்களாக கருதப்படும் வெடிக்கப்படாத வெடிபொருட்களை களையும் பணி இலங்கை முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கின் வாகரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் நிலக்கண்ணி வெடிகளின் பேராபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்பது அங்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறியக் கிடைத்தது.

ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு தினத்தின் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலக்கண்ணி வெடி தொடர்பான கல்வியை வழங்குவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். யாழ் தீபகற்பத்தின் ஏனைய இளைஞர்களைப் போன்றே மகாலிங்கம் ஜெகநாதனுக்கும் தனது சொந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மகாலிங்கம் ஜெகநாதன் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் நிலக்கண்ணிவெடி மீட்பாளராக பணியாற்றுகின்றார். 32 வயதான மகாலிங்கம் ஜெகநாதனை அவர்களது தொழில் சகாக்கள் “ஜெக்” என செல்லமாக அழைக்கின்றனர். அவரது தமிழ் நண்பர்கள் ஜெகா என அன்போடு அழைக்கின்றனர். ஜெகநாதன் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவராவார். யாழ்ப்பாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடியகழ்வுப் பணிகளில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மகாலிங்கம் ஜெகநாதன் தனது அனுபவத்தையும், உணர்வுகளையும் ஊடகவியலாளர் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளையுடன் பகிர்ந்துகொண்டார்.

அந்த செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கேள்வி: எதனால் நீங்கள் நிலக்கண்ணிவெடி மீட்புப் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்: 2001ம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதனைத் தொடர்ந்து நான் யாழ்ப்பாணத்திற்கு செல்லத் தீர்மானித்தேன். நான் ஒரு தொழில்நுட்பவியலாளராக கொழும்பில் பணியாற்றினேன். எனது கிராம மக்களின் புனர்வாழ்வு பணிகளுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என நான் உணர்ந்தேன். ஹலோ ட்ரஸ்ட் தொண்டு நிறுவனத்தில் நானொரு மொழிபெயர்ப்பாளனாக இணைந்துகொண்டேன். (தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்) எனக்கு மூன்று மாத கால பயிற்சி வழங்கப்பட்டது.

கேள்வி: நீங்கள் நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொண்ட போது உங்களது குடும்பத்தாரின் மனோநிலை எவ்வாறிருந்தது?

பதில்: ஆரம்பத்தில் எனது குடும்பத்தாருக்கு நான் கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தெரியாது. சில காலத்திற்கு பின்னர் நான் கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கொண்டார்கள். ஆபத்தான கண்ணிவெடிகளை நான் கையாள்கிறேன் என்று அறிந்த போது அவர்கள் சற்று வருத்தமடைந்தனர். பின்னர் எங்களது பிரதேச மக்களின் நலன்கருதி தன்னார்வமாக மனிதாபிமான ரீதியில் இந்தப் பணிகளை நான் மேற்கொள்வதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இதனால் அவர்கள் மகிழ்;ச்சியடைகின்றனர்.

கணக்காளர் மற்றும் பொறியியலாளர் போன்ற தொழில்களை விடுத்து கண்ணிவெடி மீட்பாளர் பணியை தெரிவு செய்தேன். எனினும், மிகப்பாரிய ஆபத்தான சவால்களை நான் எதிர்நோக்குகின்றேன்.

கேள்வி: நிலக்கண்ணிவெடி மீட்புப்பணியாளர் என்பதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: நிலக்கண்ணிவெடி அகழ்வுப் பணியாளர் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும், இதுவொரு ஆபத்தான தொழில். ஒரு சிறிய பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற சுமார் 40 நாட்கள் தேவைப்படும். மழைபெய்யாத காலத்தில் நிலம் மிகவும் இருக்கமானதாக காணப்படும். பாண்டாத்தரிப்பு, வில்லான், சாவகச்சேரி, இருபாலை, ஊரெழு மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். சுமார் 20,000 உயிர் நிலக்கண்ணிவெடிகளை யாழ்ப்பாண பகுதிகளிலிருந்து அகற்றியுள்ளேன். இதன் மூலம் பல விலைமதிப்பற்ற உயிர்களை என்னால் பாதுகாக்க முடிந்துள்ளது.

கேள்வி: நீங்கள் முதல் முதலாக ஒரு நிலக்கண்ணி வெடியை அவதானித்த போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

பதில்: என்னை அன்புடனும், அரவணைப்புடனும் வளர்த்த எனது தாயாரின் திருமுகம் நினைவுக்கு வந்தது. பின்னர் அடுத்த நிலக் கண்ணிவெடி எங்கு புதைக்கப்பட்டிருக்கும் என்ற யோசனை எனக்குத் தோன்றியது. நான் பல சந்தர்ப்பங்களில் மதிப்பீடு செய்யப்படாத சிறிய நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்டுள்ள களங்களுக்கு சென்றுள்ளேன். நான் இதுவரையில் உயிர் வாழ்வதை ஒரு அதிஷ்டமாக கருதுகின்றேன். ஒவ்வோர் அனுபவத்தையும் நல்லதொரு பாடமாகவே நான் நோக்குகின்றேன்.

கேள்வி: நிலக்கண்ணிவெடி புதைக்கப்பட்ட பிரதேசத்தை அடையாளங் காண்பதற்கும், சேதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் பொதுமக்கள் எவ்வாறான நடைமுறைளை பின்பற்ற வேண்டும் என நீங்கள் ஆலோசனை வழங்குவீர்கள்?

பதில்: சந்தேகத்திற்கு இடமான பிரதேசங்களில் கால் பதிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு நான் மக்களுக்கு குறிப்பிடுவேன். மிருக எலும்புக் கூடுகள் காணப்படுகின்ற பிரதேசங்கள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். மேலும், இராணுவ முகாம்கள் மற்றும் காவலரன்கள் அமைந்திருக்கும் பிரதேசத்தில் சஞ்சரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நிலக்கண்ணி வெடி இருப்பதாக அடையாளங் காணப்பட்ட பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடி இருப்பதாக அறிவுப்புப் பலகை இடப்பட்டிருக்கும். இந்தப் பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் பூர்த்தியடையும் வரை குறித்த பிரேசத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நிலக்கண்ணி வெடிகள் காணப்படும் என சந்தேகம் நிலவினால் அருகில் இருக்கும் மீட்புப் பணி நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட வேண்டும். நான் நிலக்கண்ணி வெடிகளினால் பாதிக்கப்பட்ட பலரை சந்தித்துள்ளேன். நிலக் கண்ணி வெடிகள் தொடர்பாக அவதானத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறே நான் பொதுமக்களிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

கேள்வி: போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் பல்லாயிரக் கணக்கான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. தற்போது வன்முறைகள் உக்கிரமடைந்து வருகின்றன இதனால் போரில் ஈடுபடும் தரப்பினர் நிலக்கண்ணி வெடிகளை புதைக்கலாம். இந்த நிலைமை உங்களுக்கு சவாலாக அமையுமா?

பதில்: நிச்சயமாக, 2001ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டதன் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தைமார், தாய்மார், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர். மேலும், மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவரும் இந்த யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான சிவிலியன்கள் இடம்பெயர்ந்துள்ளனர். விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியேறிய பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் தமது வழமையான வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்திருந்தனர். எனினும், மிகவும் துரதிஷ்டவசமாக பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்த போது, புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, விவாசய நடவடிக்கைகள் எழுச்சிப் பெறத் தொடங்கியிருந்தது.

கேள்வி: நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு இளைஞர்களையும், யுவதிகளையும் ஊக்குவிப்பீர்களா?

பதில்: ஆம், நிச்சயமாக, தற்போதைய யாழ்;ப்பாண நிலைமையை கருத்திற் கொண்டு இளைஞர் யுவதிகள் நிச்சயமாக அர்ப்பணிப்புடன் இந்த தொண்டில் ஈடுபட வேண்டும் என்பதே என வேண்டுகோள்.

நன்றி:ஊற்று

No comments: