Friday, 25 April 2008

ஈழத்தமிழர் இறைமையின் ஆதாரத்தில் கொசோவோ போன்று ஒரு அரசை உருவாக்க முற்பட்ட தந்தை செல்வா

* நாளை 31 ஆவது நினைவு தினம்

சா.ஆ. தருமரத்தினம்

தாம் தரிசனமாகக் கண்ட சுதந்திர தமிழ் ஈழநாட்டை மீள்விக்கும் பணியில் ஈழத் தமிழர் இறைமையைத் தமது அரசியல் வாழ்வில் தந்தை செல்வா வெகு சாதுரியமாக மீள்வித்துத் தந்திருந்தாராயினும் நாட்டின் பூரண சுதந்திரமும் அரசியல் அதிகாரமும் தமிழர் கைக்குக் கிட்டுவதற்கு முன்பாகவே தமது எண்பதாவது வயதில் தந்தை செல்வா மறுமைக்குள் பிரவேசித்துவிட்டார். ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபத்தேழாம் ஆண்டு ஏப்ரல் திங்கள் இருபத்தாறாம் நாளிலேயே இவ்வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்திருந்தது.

அதன் காரணமாகவே தந்தை செல்வாவின் பொன்னுடலை தகனம் செய்த தென் இந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் பேராயர் அதிவண. அம்பலவாணர் அடிகளார் தந்தை செல்வாவின் வாழ்வை கிறிஸ்தவ விவிலிய நூல் உரைக்கும் மோசே தீர்க்கதரிசியின் வாழ்வுடன் ஒப்பீடு செய்தே மேற்படி தகன நிகழ்வைப் பூர்த்தி செய்திருந்தார்.

யூத மக்களுக்கு கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட பாலும் தேனும் சுரக்கும் கானான் நாட்டை மீட்கும் நெடும் பயணத்தைத் தீர்க்கதரிசி மோசே பெரும்பாலும் நிறைவு செய்திருந்த பொழுதிலும் அதில் தாம் கால் பதிப்பதற்குச் சிறிது முன்பாகவே மரிக்க நேரிட்டதையும் தீர்க்கதரிசி மோசேக்குப் பின்வந்த யோசுவாவே யூத மக்களை கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் சென்றிருந்தான் என்பதை நினைவுபடுத்தும் பொருட்டாகவே யாழ். ஆயர் அம்பலவாணர் அடிகளார் அவ்வாறு உரைத்திருந்தார்.

தந்தை செல்வா இவ்வுலகில் வாழ்ந்த காலம் எண்பது வருடங்களாகும். ஆதலால் அவர் நினைவாக ஓர் எண்பது அடி உயரமான நினைவுத் தூண் எழுப்பப்பட்ட போதும்கூட, அதன் அடிக்கல் நாட்டு விழா வைபவத்திலும் அதி.வண அம்பலவாணர் அடிகளார் அதே வார்த்தைகளையே திரும்பவும் உரைத்திருந்தார்.

தந்தை செல்வா நினைவாலயமாக நிறுவப்பட்ட மேற்படி நினைவுத் தூண் நிறைவு செய்யப்பட்டு பின்னர் வைபவ முறையாகத் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில், ஆசியுரை நிகழ்த்தும் போதும் ஆயர் அதி.வண அம்பலவாணர் அடிகளார் உரைத்திருந்ததும் அதே வார்த்தைகள் தாம்.

தந்தை செல்வா நினைவாலயத்தை நிறுவியிருந்த தந்தை செல்வா அறங்காவல் குழுவினர் வருடா வருடம் தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதெனத் தீர்மானித்து மேற்படி சொற்பொழிவுகள் வரிசையில் இரண்டாவது சொற்பொழிவினைத் தந்தை செல்வா நினைவாலயம் வைபவ முறையாகத் திறந்து வைக்கப்பட்ட தினத்தை அடுத்துவந்த இரு தினங்களில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வண.பிதா சேவியர் தனிநாயக அடிகளார் மூலம் நிறைவேற்றியிருந்தனர்.

தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுச் சொற்பொழிவுகள் தொடரை வைபவ முறையாக நிகழ்த்தி வைக்கவிருந்த வண.பிதா சேவியர் தனிநாயக அடிகளாருக்கு மேற்படி சொற்பொழிவுகளை அவர் ஆரம்பித்த முதல் நாள் காலையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் இராஜா விசுவநாதனும், மாநகர சபை உறுப்பினர்களும் யாழ்ப்பாண மாநகர சபை சார்பில் பொதுவரவேற்பு அளித்து அடிகளாரைக் கௌரவித்திருந்தமையும் நினைவுகூரப்படுதல் வேண்டும். தமது வாழ்வில் தனிநாயக அடிகளார் கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்வு அதுவே.

தந்தை செல்வா ஞாபகார்த்த சொற்பொழிவுகள் அச்சிடப்பட்டு அவற்றின் பிரதிகள் சொற்பொழிவுகள் நிகழும் சமகாலத்தில் அவற்றைச் செவிமடுப்போருக்கு வழங்கப்படுதலே மரபாகப் பேணப்பட்டு வந்தது. ஆயினும், மேற்படி நடைமுறை சமீபகாலங்களில் கைவிடப்பட்டிருத்தல் துர்ப்பாக்கியமானதே!

அது போன்றே தந்தை செல்வாவின் மறைவு தினத்தில் அவரது சொந்தவூரான தெல்லிப்பழைக் கிராம மக்கள் வருடா வருடம் தெல்லிப்பழை தேவாலயத்தில் தந்தை செல்வா வாழ்வுக்கும் பணிகளுக்கும் இறைவனுக்கு நன்றி பகரும் ஆராதனைகளை ஏறெடுக்கும் மரபினை வழமையாக்கிக் கொண்டிருந்தனர். தெல்லிப்பழை தேவாலயம் இராணுவத்தினர் கட்டுப்பாட்டினுள் பாதுகாப்பு வலயத்துக்குக் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னரும் மேற்படி ஆராதனையைத் தெல்லிப்பழை கிராம மக்கள் தாம் இடம்பெயர்ந்திருந்த நிலையிலும் கைவிடாதவர்களாக தொடர்ந்தும் மாற்று இடங்களில் நடத்தி வரவே தலைப்பட்டனர். இவ்வாறாக 1995 ஆம் ஆண்டில் உடுவில் தேவாலயத்தில் நிகழ்ந்த ஆராதனையில் தென் இந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அதி.வண. எஸ். ஜெபநேசன் அடிகளார் அருளுரை நிகழ்த்தியபோது, கட்டுரையாளர் புகழுரை வழங்கியிருந்தார். தெல்லிப்பழை கிராம மக்கள் சார்பில் தந்தை செல்வா நினைவு தினங்களில் தெல்லிப்பழை தேவாலயத்தில் மேற்படி நினைவுகூரும் ஆராதனைகளை ஏற்பாடு செய்து ஒழுங்குசெய்து வந்திருப்பவர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவமகாராச அவர்கள் தாம். கடந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டமையால் தெல்லிப்பழை ஊர் மக்கள் சார்பில் ஏனையோர் வேறு எவரேனும் மேற்படி நற்பணியைத் தொடர்வார்களாக!

அதுபோன்றே தற்போது தந்தை செல்வா அறங்காவல் குழுவின் தலைவராகவிருக்கும் ஆயர் அதிவண ஜெபநேசன் அடிகளாரும் தற்சமயம் தடைப்பட்டிருக்கும் தந்தை செல்வா ஞாபகார்த்த சொற்பொழிவுகளும் வருடா வருடம் தடையின்றித் தொடர்வதற்கு ஆவன செய்வாரென எதிர்பார்க்கலாம்.

தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுத் தூண் தமிழக முதல்வர் மு. கருணாநிதியைக் கலந்துகொண்டு அவரது மதியுரை பெற்றே நிர்மாணிக்கப்பட்டிருத்தலை யாவரும் அறிவர். ஆயினும், அதனை நிர்மாணிப்பதற்கே பொருத்தமான ஏற்ற இடத்தைப் பெறுவதற்கு வாய்ப்பான முடிக்குரிய காணியைப் பெற அரசிடம் அனுமதியும் பெற்றாதல் வேண்டும். மேற்படி, வில்லங்கத்தைத் தவிர்ப்பதற்கு வழிவகுத்துத் தந்தவர் வேறு யாரும் அல்ல! அப்போது யாழ். மாநகர ஆணையாளராக இருந்த சி.வி.கே. சிவஞானம் அவர்கள் தாம். தற்போது தந்தை செல்வா நினைவாலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அந்த இடமே அதற்குப் பொருத்தமான இடமென்றும் அதற்கான அனுமதி பெற அலைய வேண்டியதில்லையெனவும் காரணம், அது யாழ்ப்பாண மாநகர சபைக்கே சொந்தமானதெனும் தகவலை சி.வி.கே. சிவஞானம் கட்டுரையாளர் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலதிபர் அ. அமிர்தலிங்கத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தவர் ஆவார்.

தந்தை செல்வா நினைவாலயம் திறந்து வைக்கப்பட்ட பின் தந்தை செல்வாவின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினக் காலையில் அங்கு தானே வருடந்தோறும் மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வரலாயின. ஆயினும், தந்தை செல்வா நினைவாலயத்தின் அருகில் இருப்பதான யாழ்ப்பாணம் பழைய ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவ முகாம் இடம்பெற்று தந்தை செல்வா நினைவாலயம் உள்ளடங்கியதாக கோட்டையைச் சூழ்ந்த பகுதி முட்கம்பி வேலியினுள் அடக்கப்பட்டு உச்சப் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதும் மேற்படி நடைமுறை சில வருடங்கள் தடைப்பட்டு இருந்ததும் தெரிந்ததே! ஆயினும் பழைய ஒல்லாந்தர் கோட்டை இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதும் மேற்படி தடை நீங்கிற்று.

ஆயினும், 1983 ஜூலை தமிழினப் படுகொலைகளைத் தொடர்ந்து 1978 ஆம் வருடத்திய ஜனநாயக சோஷலிச குடியரசு யாப்புக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தமாகிய பிரிவினைத் தடைச்சட்டம் காரணமாகத் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் கடல்கடந்து இந்தியாவில் புகலிடம் தேடிக்கொண்டிருந்தமையால் தந்தை செல்வா நினைவாலய மலர் அஞ்சலி நிகழ்வுகள் முற்றாகவே கைவிடப்பட்டிருந்தன.

அப்போதும் கட்டுரையாளர் தந்தை செல்வாவின் முக்கிய தினங்களில் அவர் குறித்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வெளியிடத் தவறுவதில்லை. அதனைப் பார்த்த அத்தியடி வீதியில் வசித்துவருபவரான தந்தை செல்வா நினைவுக் குழுவின் தலைவர் சதாசிவம், கட்டுரையாளரை நோக்கி ்வா நாம் இருவருமாக சென்று தந்தை செல்வா பிறந்த நாளாகிய மார்ச் 31 ஆம் திகதி காலை தந்தை செல்வா நினைவாலயத்தில் மலர் அஞ்சலியை நிறைவேற்றி வருவோம் என அழைத்திருந்தார். அதன்படி இருவரும் மலர்களுடன் புறப்பட்டபோது, ஒரு சமயம் தமிழரசுக் கட்சியின் தலைநகர் கொழும்புக் கிளையிலும், அச்சமயம் உரும்பிராய் கிளையிலும் செயலாளராகவிருந்த நாட்டுப் பற்றாளர் அமரர் குலசேகரம் இருவருக்கும் எதிராக வந்து கொண்டிருந்தார். இருவரது நோக்கத்தையும் அறிந்துகொண்டு நாட்டுப் பற்றாளர் குலசேகரம் உடன்வர மூவரும் அன்று தந்தை செல்வா நினைவாலயத்தை அடைந்து தமது ஆவலை நிறைவேற்றியிருந்தனர். மேற்படி நிகழ்வைச் செய்தியாக வெளியிட்ட `முரசொலி' பத்திரிகையோ தந்தை செல்வா நினைவாலயத்தில் அம் மூவரும் மலர் அஞ்சலி செய்ததை" வழிப்போக்கர் வேடிக்கை பார்த்திருந்ததாகச்" செய்தி வெளியிட்டிருந்தது. மலர் அஞ்சலி நிகழ்வை "வழிப்போக்கர்கள் வேடிக்கை பார்த்திருந்தார்கள்" எனும் வார்த்தைப் பிரயோகத்தை அப்போது கோண்டாவில் பலாலி வீதிச் சந்தியில் பணியகத்தைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் பிரமுகர்கள் டொமினிக் மற்றும் பஸீர் காக்கா இருவருமே கடுமையாக ஆட்சேபித்தவர்களாக தந்தை செல்வா நினைவுக்குழுவின் தலைவர் சதாசிவத்தை நோக்கி தந்தை செல்வாவின் எதிர்வரவிருந்த நினைவு தினத்தில் ஒரு பொதுக் கூட்டத்தையே நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள். அத்துடன், நில்லாது பத்திரிகைகளில் விளம்பரமும் செய்து அரியாலை காசிப்பிள்ளை அரங்கையும் அதற்காக ஒழுங்குசெய்து ஒலிபெருக்கி சாதனத்தையும் அவர்களே ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள்.

தந்தை செல்வா நினைவுக் குழுவினர் வெறுமனே அரங்கில் உதவிகளை மட்டுமே நிகழ்த்தியிருந்தனர். கூட்டத்தை அறிவிக்கும் துண்டுப் பிரசுரத்தில் வயோதிபராகிய தந்தை செல்வாவின் ஒளிப்படத்தைச் சுட்டிய ஒரு பன்னிரு வயதுச் சிறுவன் சதாசிவத்திடம் படத்தில் காணப்படுபவர் `எந்த பீல்டில் களப்பலியானவர்' என விசாரித்து இருந்தான். அச்சிறுவனை விழித்து சதாசிவமோ சிறுவனை கூட்டத்தில் நிகழ்த்தப்படும் உரைகளைச் செவிமடுக்கும்படியும், வீட்டுக்குத் திரும்பியதும் அவனது பெற்றோரிடமே அவன் கேட்ட கேள்வியை வினவும்படியும், ஏற்ற பதிலை அவர்கள் உரைப்பார்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.

1995 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாளில் வந்த தந்தை செல்வா நினைவு தினத்தில் அன்று காலையில் தந்தை செல்வா நினைவாலயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாமாகவே மலர் அஞ்சலியை சிறப்பாக நிறைவேற்றியிருந்ததுடன், அன்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவில் வீதியில் தந்தை செல்வா நினைவுக் குழுவினருடன் கூட்டாக ஓர் அஞ்சலிப் பொதுக்கூட்டத்தையும் நடத்தியிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் யோகியும் நீதித்துறைப் பொறுப்பாளர் பராவும் கவிஞர் வாஞ்சி நாதனும் புலிகள் சார்பில் கூட்டத்தில் உரை நிகழ்த்தியிருந்தனர். தென் இந்தியத் திருச்சபையின் ஆயர் அதி.வண ஜெபநேசன் ஆண்டகை சார்பில் வண. ஜெயகுமாரன் அடிகளாரும் தந்தை செல்வா நினைவுக் குழுவின் சார்பில் கட்டுரையாளரும் உரை நிகழ்த்தியிருந்தனர்.

கறையான் புற்றெடுக்க பாம்பு குடி புகுந்த பாங்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயர்ப் பலகையைத் தமதாக்கிக் கொண்டிருக்கும் வீ. ஆனந்தசங்கரி இந்த ஆண்டில் வந்த தந்தை செல்வா பிறந்தநாளைக் கண்டுகொள்ளாது அசட்டை செய்திருந்தமை வியப்பல்ல. முன்பெனில் வெறுமனே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைப் பணியகத்திலாவது மலர் அஞ்சலி நிகழ்வை நடத்திக் காட்டியிருப்பார்.

நேரில் தொடக்கூடிய மூக்கை தலையைச் சுற்றித் தொடும் வழக்கத்தைக் கொண்டவர் ஆனந்தசங்கரி. அவரது தந்தை ஆசிரியர் வீரசிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஓர் ஆரம்பகால உறுப்பினர், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவின் உறுப்பினர் பதவிகளை வகித்த ஒருவர், தமது தந்தையாரைப் பின்பற்றி ஆனந்தசங்கரி தாமும் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியில் ஓர் உறுப்பினராகத் தம்மை இணைத்துக்கொண்டிருப்பாராகில், 1959 இல் கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1960 மார்ச், ஜூலை மாதங்களில் எதிர்வந்த பொதுத் தேர்தல்களிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வந்திருக்க இயலுமாக அவருக்கு இருந்திருக்கும்.

(நாளை தொடரும்)

No comments: