Sunday, 11 May 2008

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி (2nd Lead)

நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வென்றிருப்பதுடன், திருகோ மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 105,341 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை வென்றிருப்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 58,602 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், தமிழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு 7,714 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 89 வீதமான வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன், 11 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 59 வீதமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 70,758 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை வெற்றிபெற்றிருப்பதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,298 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை வென்றிருப்பதுடன், மக்கள் விடுதலை முன்னணி 4,266 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் வென்றுள்ளது.

14 ஆசனங்களைக் கொண்ட அம்பறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144, 247 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 121,272 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 4,745 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 308,886 வாக்குகளைப் பெற்று 20 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 250,732 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 9,390 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், தமிழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு 7,714 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் வென்றுள்ளது.

கிழக்கு மாகாணசபைக்கான விரும்புவாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட பிள்ளையானுக்கு 41, 936 வாக்குகளும் அதே கட்சியில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவுக்கு 35,949 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

No comments: