Wednesday 14 May 2008

500 வீடுகளை முஸ்லீம்களுக்கு வழங்குவதை தடை செய்ய ஹெல உறுமய கோருகிறது

தீகவாபி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டததில் உள்ள வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு தடை உத்தரவு விதிக்கக்கோரி சிஹல உறுமய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் அடங்கலான 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த மனுவில் அம்பாறை மாவட்ட செயலாளர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், காணி ஆணையாளர், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பேரியல் அஸ்ரப் அடங்கலான 12 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தீகவாபி பௌத்தர்களின் வரலாற்று சிறப்புமிக்க பிரதேசம் எனவும் அங்கு தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின் தீகவாபி பகுதியில் முஸ்லிம் குடியேற்றங்கள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 1994 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்ரப், அங்கு கிராமமொன்றை அமைத்து அதில் 300 குடும்பங்களை குடியமர்த்தியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அங்கு முஸ்லிம்களை குடியமர்த்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

2004 சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தீகவாபியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள் இது ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியிலே அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிங்களவர்களுக்கோ, தமிழர்களுக்கோ வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் யாப்பின் 10ஆவது ஸரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறியுள்ள மனுதாரர்கள் வழக்கு விசாரணை முடிவடையும் வரை வீடுகளை வழங்க தடைவிதிக்குமாறு கோரியுள்ளனர்.

அதேநேரம் சிஹல உறுமய கிழக்கு மாகாணத் தேர்தலின் போது கூட்டணி சார்பில் மிகத் தீவிரமாக செயல்பட்ட கட்சியாகும். தேர்தல் முடிந்தவுடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை கிழக்கு மாகாண சிறுபான்மையினர் மத்தியில் ஒரு கேள்வியினை தோற்றுவித்துள்ளது.

No comments: