நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் கிழக்கு மக்கள் தோற்கடிக்கவேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இணைந்த வடக்கும் கிழக்கும் சமாதானத்திற்கான மையக்கல் எனக் குறிப்பிட்டிருக்கும் மாவை சேனாதிராஜா, இருப்பினும் அரசாங்கம் 18 வருடங்களுக்குப் பின்னர் இரு மாகாணங்களையும் பிரிப்பதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த தேர்தலில் நாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்க வேண்டும். ஆகவேதான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டாம் என நாம் மக்களிடம் கேட்கிறோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு 2000 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகக் குறைந்தது ஒரு வாக்குச் சாவடியில் 2 தேர்தல் கண்காணிப்பாளராவது கடமையில் ஈடபடுத்தப்படுவர் எனவும், அதற்கு மேலதிகமாக நடமாடும் கண்காணிப்புப் பிரிவும் கடமையில் ஈடுபடும் எனவும் பவ்ரல் அமைப்பின் தலைவர் கலாநிதி கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 19 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை பவ்ரல் அழைத்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 18 தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment