Saturday, 10 May 2008

இரண்டு ஜனாதிபதிகளால் இரண்டு தடவைகள் அடிக்கல்நாட்டப்பட்ட ஒலுவில் துறைமுகம்

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல்கள் ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் பல பிரசார உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒலுவில் துறைமுகம் இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டப்பட்டமையும் உள்ளடங்குகிறது.

மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருந்தொகையான அமைச்சர்கள், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றுள்ளர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அஷ்ரப்பின் பதவிக்காலத்தில் ஒலுவில் துறைமுகத்துக்கு அடிக்கல்நாட்டி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்றையதினம் நடைபெற்றுவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் அமைச்சரின் அஷ்ரப்பின் மனைவியும், அமைச்சருமான பேரியல் அஷ்ரப்பின் தலைமையில் மீண்டும் ஒலுவில் துறைமுகத்துக்கு அடிக்கல்நாட்டியுள்ளார். அன்றையதினம் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்குத் தொலைபேசி அழைப்பொன்று சென்றுள்ளது. “மேன்மை தங்கிய ஜனாதிபதி உங்களுடன் சில வார்த்தைகள் பேச விரும்புகிறார், தயவுசெய்து அரசாங்கத்துக்கு வாக்களியுங்கள்” என ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் குரல் தொலைபேசிமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அரசியல் பலமுகர்கள்பலர் நீண்ட காலத்தின் பின்னர் கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

பிரசார நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்ட பாலமொன்று, அரசாங்கத்தால் அண்மையில் மீண்டும் திறந்துவைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கடும் போட்டிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பிலும் அரசாங்கத் தரப்பிலிருந்து மோசடிகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

No comments: