Sunday, 11 May 2008

திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு: "லக்பிம"

திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் மிகவும் சக்திவாய்ந்த குண்டு ஒன்று திருகோணமலையின் வர்த்தக துறைமுகத்தில் வெடித்திருந்தது.

அதில் எழுந்த பெரும் நெருப்பு ஏ-520 என்ற பாரிய விநியோகக் கப்பலை சூழ்ந்து கொண்டது.

காவல் கடமையில் இருந்த படையினர் தமது துப்பாக்கிகளை வானத்தை நோக்கித் திருப்பினர். இது ஒரு வான் தாக்குதல் என அவர்கள் முதலில் எண்ணினர்.

இரு வாரங்களுக்கு முன்னர் வான் புலிகள் மணலாறை தாக்கியிருந்தனர். ஆனால் நீருக்கு அடியில் நடைபெற்ற தாக்குதலே கப்பலை தகர்த்திருந்தது.

எம்வி இன்வின்சிபிள் எனப்படும் ஏ-520 விநியோகக் கப்பல் அஸ்ரப் துறைமுகத்தில் நங்கூரம் பாச்சி நின்றிருந்தது.

இத்தாக்குதலில் முற்றாக எரிந்த கப்பல் 2 மணிநேரத்தில் நீரில் முற்றாக மூழ்கிவிட்டது.

தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாக பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நீரடி நீச்சல் பிரினர் கப்பலின் அடிப்பகுதியில் காந்தப்புல வெடிகுண்டை பொருத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலைப் புலிகளின் இரு நீரடி நீச்சல் பிரிவினர் கொழும்பு துறைமுகததில் நின்ற கப்பல்களை தகர்க்க முற்பட்டிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் நாளும் புதிய வகை தாக்குதல் மூலம் பி-438 இலக்க டோராப் படகு நாயாறு கடலில் வெடித்துச் சிதறியிருந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்து காந்தப்புல வெடிகுண்டின் பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.

ஸ்கூட்டர்கள் மூலம் தாக்குதல்?

விடுதலைப் புலிகள் நீருக்கு அடியில் பயணம் செய்யும் சிறிய ஸ்கூட்டர்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்திருந்தன.

2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீருக்கு அடியில் பயணம் செய்யும் ஸ்கூட்டர்களை கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்திருந்தனர். அவற்றை இலகுவில் இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் 34 ஸ்கூட்டர்களை கொள்வனவு செய்யும் பேச்சுக்களையும் அவர்கள் டென்மார்கில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் மேற்கெண்டிருந்தனர்.

பெரும்பாலான ஸ்கூட்டர்கள் பாரம் குறைந்தவை (15-20 கி.கி) இது கடலுக்கு அடியில் 1-3 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்வதுடன், நீருக்கு அடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிக்கக்கூடியவை.

இந்த ஸ்கூட்டரில் நீருக்கு அடியில் பயணிக்கும் ஒருவர் போதுமான வெடிமருந்தை காவிச் சென்று கப்பலை தகர்க்க முடியும். அதனைக் கண்டறிவது சிரமமானது. இதன் மூலம் நகரும் கப்பல்களை விட நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல்களைத் தகர்ப்பதே அதிகம் சாத்தியமானது.

1970-களில் கட்டப்பட்ட ஏ-520 ரக விநியோகக் கப்பல் சட்டவிரோத குடியேற்றவாசிகளை எற்றி வந்திருந்தது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அது 2003 ஆம் ஆண்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. அதனை விநியோகக் கப்பலாக கடற்படையினர் பின்னர் மாற்றி அமைத்திருந்தனர்.

சீனன்குடா துறைமுகம் பகுதியில் நீரடி நீச்சல் பிரிவினர் உட்புக முடியாதவாறு வலைகளாலான பாதுகாப்பைக் கொண்டது.

இத்தாக்குதலும், நாயாறு கடற்பரப்பில் நடைபெற்ற தாக்குதலும் விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் உத்திகளை கடைப்பிடிப்பதனை காட்டியுள்ளது.

லெப். கேணல் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவினர் இத்தாக்குதலை நடத்தியதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்திருந்தது.

கடற்படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களால் விடுதலைப் புலிகளின் முராஜ் ரக அதிவேக தாக்குதல் படகுகள் மற்றும் கரும்புலிப் படகுகளின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

முராஜ் படகுகள் கடற்படையினரின் டோராப் படகுகளுக்கு இணையானவை. ஆனால் கடற்புலிகளின் பலம் தொடர்பாக ஏனைய கடற்படைத் தளபதிகள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் தரையிறங்க திட்டம்

விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் உள்ள கிரானில் ஒரு கடல் தரையிறக்கத்தை மேற்கொள்ளத் திட்மிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து படையினர் எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.

முன்னாள் அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கீர்த்தியை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்புவதற்கும் விடுதலைப் புலிகள் திட்டமிட்டு வருவதாக படையினரின் புலனாய்வுத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

திருமலையில் மோதல்கள்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சித்தாறு, மீகஸ்கொடலா பகுதிகளில் கடந்த செவ்வாய்கிழமை (06.05.08) விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தன.

பள்ளமடுவில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்கள்

மன்னார் பள்ளமடுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பலமான பாதுகாப்பு அரண்களை அமைத்து வருவதாகவும், அதற்காக அவர்கள் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் படையினாரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

படையினாரின் முன்னேற்றத்தை தடுப்பதுடன், விடத்தல்தீவுக்கான வழியைத் தடை செய்வதே அவர்களின் நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: