Saturday, 10 May 2008

இலங்கையும், ஈரானும் இரகசிய இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக வெளியான அறிக்கை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

ஈரானுடன் இலங்கை ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன், அமெரிக்காவுடனான நட்புறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயற்படுவதற்கு இலங்கை தீர்மானித்திருக்கதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய ஜனாதிபதி மகமூட் அமதிநிஷாட் கடந்த மாதம் இலங்கை வந்திருந்ததுடன், இலங்கையின் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பெரும் பணம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் இலங்கையும், ஈரானும் இரகசிய இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக வெளியான அறிக்கை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

இலங்கையின் சக்திவலு அதிகரிப்புக்கு ஈரானுடன் நட்புபாராட்ட வேண்டிய நிலையில் இருக்கும் இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவுடனான உறவைப் பேணவேண்டியுள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு இரண்டு நாடுகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஈரானுடன் இராணுவ ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்திலிருக்கும் குழுவொன்று தீர்மானமொன்றை முன்வைத்தபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிஸ்டவசமாக இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பைவிட பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்புக்களையே பேணுவதற்கு ஈரான் அரசாங்கமும் விரும்புவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து வருவதாகத் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவரும் அமெரிக்கா, ஈரானுடனான உறவுகளைப் பேணுவதைத் தவிர்க்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. ஈரானுடன் இலங்கை ஏற்படுத்தியிருக்கும் உறவுநிலை தொடர்பாகவும் அமெரிக்காக அதிருப்தியடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

ttpian said...

secret pact:haircut for iran pm will be done by mahindha!