வௌ;வேறு காரணங்களுக்காக வவுனியா, ஏறாவூர் மற்றும் மூதூர் பகுதிகளில் ஹர்த்தால்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. வன்னிப் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலைக் கண்டித்து வவுனியாவிலும், கடத்தப்பட்ட முஸ்லிம்கள் இருவர் விடுவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏறாவூரிலும், மீன்பிடித் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூரிலும் ஹர்த்தால்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற கிளோமோர் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதுடன், போக்குவரத்துக்கள் முற்றாக செயலிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, மூதூர் பகுதியில் மீனவர்களை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல கடற்படையினர் விடுத்திருக்கும் தடையுத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் மீனவர்களின் அழைப்பையேற்று மூதூரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. கடற்படையினரின் தடையுத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான மூதூர் மீனவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்ததாகத் தெரியவருகிறது.
கடந்த 10ஆம் திகதி திருகோணமலை துறைமுகப் பகுதியில் கடற்படையினரின் கப்பலொன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு மூதூர் மீனவர்களுக்கு கடற்படை தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் மூதூர் மீனவர்களின் பிள்ளைகள் வருமானத் தட்டுப்பாட்டால் போதியளவு உணவின்றி பாடசாலைகளில் மயங்கி வீழ்ந்ததாகக் கூறுப்படுகிறது.
இதுஇவ்விதமிருக்க, கடந்த 22ஆம் திகதி காத்தான்குடிப் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதச் சம்பவங்களைத் தொடர்ந்து ஏறாவூர் முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் மேலும் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும், முன்னர் கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து நேற்றுமுதல் ஏறாவூர் பகுதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்துச் சேவைகள் எதுவும் அங்கு இடம்பெறவில்லையென பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment