| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இலங்கையின் எதிர்க்கட்சிகளை உடைத்து அதற்கூடாக தமது பெரும்பான்மையைக் காட்டும் ஒரு உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. இது அதனைப் பொறுத்த வரையில் வெற்றியையும் அளித்துள்ளது. இறுதியாக ஜே வி பியை உடைத்து அதன் ஒரு பிரிவைத் தமது பக்கத்தில் வைத்திருக்கும் செயற்பாட்டில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. விமல் வீரவன்சவின் தரப்பு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எதிர்வரும் 2010 ஆண்டு வரையில் பொதுத்தேர்தலுக்குச் செல்வதில்லை என முடிவிலேயே இருந்து வந்தது. எனினும் தற்போது தமது தரப்புக்குப் பிள்ளையான் விமல் வீரவன்ச, ஜாதிக ஹெல உறுமயவினர், மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன் என்ற ஆதரவு தரப்பினர் இருப்பதனால் 2010 க்கு முன்னதாகவே பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்லலாமா என அரசாங்கம் ஆலோசிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் குறித்த ஆதரவுத் தரப்பினரின் ஊழல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பான ஆவணக்கோவைகள் அரசாங்கத்தின் கைகளில் உள்ளமையாகும். தமக்கு ஆதரவளிக்காவிட்டால் உடனடியாகக் குறித்தவர்களைச் சட்டத்திற்கு முன்னால் கொண்டு வந்து எதிர்காலத்தைப் பாழடிப்பதற்கு அரசாங்கம் பின்னிற்கப்போதில்லை என்ற நிலை இலங்கையை பொறுத்தவரை யாரும் அறிந்த விடயமாகும். மறுபுறத்தில் தென்னிலங்கையைப் பொறுத்த வரையில் சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் இராணுவத்தினர் யுத்தத்தில் வெல்வர் என்ற இறுமாப்பு இருந்தே வருகிறது. எனவே அவர்கள் நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்வதையோ மனித உரிமைகள் பாதிக்கப்படுவதையோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசாங்கமும் அவர்களை அதே மனநிலையில் வைத்திருக்கும் செயற்பாட்டில் இதுவரை வெற்றி கண்டுள்ளது. இந்தநிலையில் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் முடிந்துள்ளமையை அடுத்து அடுத்ததாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணத் தேர்தலை நடத்த அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது. பொதுத்தேர்தலில் வென்று அதன் பின்னர் மாகாணசபைத் தோதல்களில் வெல்வது இலேசான காரியம் என அரசாங்கம் நினைக்கிறது. எனவேதான் மாகாணசபைத் தேர்தல்களை முடித்த பின்னர் சில வேளைகளில் இந்த வருடத்திற்குள்ளேயே பொதுத்தேர்தலுக்குச் செல்ல அரசாங்கம் திட்டமிடு உள்ளக அரச தரப்புகள் கூறுகின்றன. மக்கள் செல்வாக்கு என்பதைக் காட்டிலும் அரச அதிகாரத்தின் அடிப்படையில் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்ற எண்ணமும் அரசாங்கத்திடம் எழுந்துள்ளது. மோசடிகள் நடைபெற்றாலும் அதனை மூடி மறைக்கும் நிர்வாகம் ஒன்றை அரசாங்கத்தினால் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. எனவே அரசாங்கம் தற்போது தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் பலமான நிலையிலேயே உள்ளது எனலாம். எனினும் இதனை உடைக்கவேண்டிய பொறுப்புத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளிலேயே இருப்பதை அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் ஏற்றுக்கொள்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் அரசாங்க நிர்வாகம் உள்ளதாகக் காட்டிக்கொள்வதும் வடக்குப் போரில் இராணுவம் வெற்றி பெறுவதாகக் காட்டிக்கொள்ளும் நிலைப்பாட்டிலும் வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களில் தமிழர்கள் கடத்திச் செல்லப்படுகின்றமை மற்றும் காணாமல் போகின்றமை போன்ற விடயங்களில் அரசாங்கத்தை தோற்கடிக்கும் ஆளுமை தமிழீழ விடுதலைப்புலிகளிடமே உள்ளதை அரசாங்கத்தின் எதிர்தரப்பினர் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனவே இதற்கான முனைப்புகளையே அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து எதிர்ப்பார்த்துக்கொண்ருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிறுவன ஆசிய ஆசனத்தை இலங்கை இழந்ததன் பின்னர் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. tamilwin.com |
Monday, 26 May 2008
அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் ஆளுமை தமிழீழ விடுதலைப் புலிகளிடமே உள்ளது (சமகால அரசியல் ஆய்வு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment