கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (40) இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இராஜதந்திர கடவுச்சீட்டுடன பிரித்தானியாவிற்குள் நுழைந்தற்காக கடந்த ஆண்டு நவம்பர் 2, முதல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இவர் மே 8ல் விடுதலையானார்.
இவர் விடுதலையானதும் உள்துறை அமைச்சினால் தடுத்து வைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் குற்றவாளியை உள்துறை அமைச்சு தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதே வழமையான நடைமுறையுமாகும்.
ஆனால் கேர்ணல் கருணா மீது போர்க்குற்றங்களுக்கான குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட வேண்டும் என உரிமை அமைப்புகள் கோரி வந்திரந்தன. ஆனால் கர்ணல் கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று Crown Prosecution Service - CPS மே 9ல் கைவிரித்து விட்டது.
கருணா மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்து தண்டனை தரும் அளவுக்கு தேவையான யதார்த்தமான ஆதாரங்கள் போதியளவுக்கு இல்லை என Crown Prosecution Service - CPS கூறியுள்ளது.
Crown Prosecution Service - CPS இன் ஆலோசனைப்படி பிரித்தானிய பொலிசார் கருணாவுக்கு எதிராக மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இந்நிலையில் கேர்ணல் கருணா அகதி அந்தந்ஸ்தை கோரினால் அல்லது ஏற்கனவெ அகதி அந்தஸ்து கோரியுள்ள தனது குடும்பத்தாரில் தங்கி இருக்க கோரியிருந்தால் அவர் உள்துறை அமைச்சால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்க முடியும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சட்ட நிபுணர்.
ஆனால் ஐ.சூர்யாவிற்கு கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவலின் படி கருணா இலங்கை திரும்புவதற்கு விரும்பியுள்ளார். தனது நிலைப்பாட்டை உள்துறை அமைச்சு அலுவலர்களுக்கு அவர் தெரியப்படுத்தியும் உள்ளார். ஆயினும் இச்செய்தியை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
கேர்ணல் கருணா பிரித்தானியாவில் தங்குவதற்கு முயற்சிக்காத நிலையில் அவரை உள்துறை அமைச்சு தடுத்து வைப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை.
கருணா பிரித்தானியாவுக்குள் நுழைந்தது போலியான ராஜதந்திர கடவுச்சீட்டு ஆகையால் இலங்கைத் தூதரகம் புதிய பயணச் சீட்டை வழங்கியதும் அவர் இலங்கைக்கு விமானம் ஏறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அது சில மணி நேரங்களா அல்லது சில நாட்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சர்வதேசத்திற்கு மனித உரிமைகள் பற்றிப் போதிக்கும் பிரித்தானியா உட்பட்ட மேற்கு நாடுகளும் மனித உரிமைகள் பற்றி குரலெழுப்பும் உரிமை அமைப்புகளும் இறுதியில் தமிழ் மக்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்.
கேர்ணல் கருணா மீது போர்க் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும்.
ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கு நாடுகள் எடுக்காமல் மனித உரிமையை வலியுறுத்துவது வெறும் நீலிக் கண்ணீர் என்பதை மீண்டும் ஒருமுறை அவை நிரூபித்து உள்ளன.

No comments:
Post a Comment