Thursday, 3 July 2008

"13 ஆவது திருத்தம் செத்துப்போனதொன்று'

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் செத்துப்போனதொன்று என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இரா.சம்பந்தன் ஆளும்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பொருளாதார உச்சி மாநாடு 2008 இல் கலந்து கொண்டு புதன்கிழமை கருத்துரை வழங்குகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியும் எதிரணியும் இணக்கப்பாட்டுக்கு வரும் வரை விடுதலைப் புலிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்களெனவும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு அணுக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கருத்தொருமைப்பாடு எப்போதாவது ஏற்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இம்மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வேந்தரும், மதங்களின் சம்மேளனத்தின் செயலாளருமான வண. பொலன்வீல விமலரத்ன தேரர் , கட்சி அரசியலில் பௌத்த மத குருமார் ஈடுபடுவதை விமர்சித்திருக்கிறார்.

எது சரி? எது பிழை என்பது தொடர்பாக மத குருவொருவர் சரியான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றில் ஈடுபாடு காட்டுவது அவர்களின் தீர்மானத்தை கேள்விக்குரியதாகமாற்றிவிடும். இரு பிரதான அரசியல் கட்சிகளும் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண கருத்தொருமைப்பாடு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

No comments: