அம்பாறை மாவட்டம் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாலத்தினை திறந்து வைத்து மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1:00 மணியளவில் பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகளால் அகோர எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலினைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து மகிந்த ராஜபக்சவினை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி விரைவதற்காக உடனடியாக அங்கு விரைந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி மீதும் விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தினர்.
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதிக்கு மேலாக உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்தபோது பிற்பகல் 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தி சிவப்பு விளக்கை எரிய விட்டவாறே தாழ்வாகப் பறந்து உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பாடசாலை மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். அது மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்திருக்கின்றது.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதனை சிறிலங்கா வான்படையும் ஒத்துக்கொண்டிருக்கின்றது.
இது குறித்து சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த மூன்று உலங்குவானூர்திகளில் ஒன்று அறுகம்குடா உல்லைப் பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேற்படி உலங்குவானூர்தி இயந்திரக் கோளாறு காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக முதல்கட்டமாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை உகண இராணுவ முகாமில் எரிபொருளை நிரப்பிவிட்டு அறுகம்குடா நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டு வருகின்றது.
தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இருக்கவில்லை. அவர் அறுகம்குடா பால திறப்பு விழாவில் அச்சயம் இருந்தார் என்றார்.
இதேவேளை பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலானது நன்கு திட்டமிட்டு நேர்த்தியாக நடைபெற்றிருப்பது புலப்படுவதுடன், இலங்கையில் தலைவர்கள் சென்றுவர இருந்த கடைசி பாதுகாப்பான ஆகாய வழி பாதையின் பாதுகாப்பையும் இப்போது கேள்விகுறியாகியுள்ளது... இனிவரும் காலங்களில் விடுதலை புலிகள் இவ்வாறான தாக்குதலை அதிகரிகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
1 comment:
aha!
Bastard escaped in hair gap!
Post a Comment