Tuesday, 1 July 2008

25 வருடம் - 8000 சூடு – 430 பேர் கொலை - 100 பேரை காணவில்லை – தட்டிக் கேட்கவில்லை இந்தியா!!!

இலங்கை கடற்படை தொடர்ந்து 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சுடுவதை இந்திய மத்திய அரசு தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ இல்லை. இது இந்தியாவின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார். மீனவர் வாழ்வுரிமை கோரிக்கைப் பயணத்தை ஜூன் 25-ம் திகதி தொடங்கி, சுமார் 400 கி.மீ. வரை கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினரை சந்தித்துள்ளதாகவும் கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுமார் 8000 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

430 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரை 100 பேர் காணாமல் போனதாகவும் தெரியவருகிறது எனவும் தா.பாண்டியன் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மட்டுமே சுடப்படுகின்றனர். பிற மாநில மீனவர்கள் யாரும் சுடப்படுவதில்லை.

இதுவரை இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு கூறவில்லை. ஒரு எச்சரிக்கை கூட செய்யவில்லை.

இந்த விடயத்தில் இந்திய அரசு எந்த வழியையாவது பின்பற்றி இனிமேல் சுடமாட்டோம் என்ற உறுதியை பெற்றுத் தர வேண்டும். இது இந்தியாவின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால். இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எனவும் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

தமிழக மீனவர்களுக்கு தன்னைக் காத்துக் கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீன்பிடிக்க போகும் ஒவ்வொரு படகிலும் பாதுகாப்புக்கு ஒரு காவலரை அனுப்ப வேண்டும்.


மீன் பிடிக்கும் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

1 comment:

ttpian said...

O.K Mr.Pandiyan!
why you are not pressing the central govt,so far?
why u r supporting the central govt?