Friday, 18 July 2008

கொழும்பில் காவல்துறையினர் அடாவடி: 600 வீடுகளை இடித்து தரைமட்டம்- ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி

http://www.lankadissent.com/en/images/stories/demo/other/glainvidiya-300px.jpg
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். http://d.yimg.com/us.yimg.com/p/ap/20080718/capt.1cad411041204104bad16332db52bcbc.sri_lanka__xga104.jpg?x=400&y=317&sig=HIftU1ZjhOHQMzN_uCrOwQ--

வீடுகள் இடிக்கப்படுவதற்கு தமது முழுமையான எதிர்ப்பை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் வெளிப்படுத்தியதையடுத்து அம் மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்தியவாறே வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

கொம்பனி வீதியில் உள்ள சட்டரீதியற்ற வீடுகளை இடித்து அகற்றப்போவதாக ஜூலை மாத தொடக்கத்தில் அறிவித்திருந்த அரசாங்கம், அப்பகுதியில் உள்ள மக்களை ஜூலை 17 ஆம் நாளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.





எனினும் அந்த உத்தரவை ஏற்க மறுத்த குடியிருப்பாளர்கள், தொடர்ந்தும் அப்பகுதியிலேயே இருந்தனர்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வீடுகளை இடிப்பதற்கான அங்கீகாரத்தையும் அரசாங்கம் பெற்றிருந்தது.

எனினும் இந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறாததையடுத்து அப்பகுதி மக்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் இந்த குடியிருப்புக்களை இடிப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் இந்த வீடுகளை இடிக்கக்கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.





இந்த உத்தரவு இன்று மாலையே எழுத்துமூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். எனவே எழுத்துமூலம் உயர்நீதிமன்ற உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இன்று பிற்பகல் இந்த வீடுகளை அவசர அவசரமாக அகற்றும் பணியில் காவல்துறையினர் இறங்கினர்.

இதனையடுத்தே காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பில் அது முடிவடைந்தது. இதனையடுத்து அப்பகுதியிலிருந்து மக்களை விரட்டுவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

காவல்துறையினரின் இந்த அடாவடித்தனத்தை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவர்களின் புகைப்படக்கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. காவல்துறையினர் மீது அப்பகுதி இளைஞர்களும் பெண்களும் ஆவேசத்துடன் முழக்கமிட்டவாறு தாக்குதல் நடத்த முற்பட்டனர்.



இதனால் காவல்துறையினர் குறிப்பிட்ட சில இளைஞர்கள் மீது குண்டாந்தடியடி நடத்தியதுடன் அவர்களை கைது செய்துள்ளனர்.

தற்போது வீடுகள் தொடர்ந்தும் இடிக்கப்பட்டு வருகின்றது. அப்பகுதி மக்களின் சொத்துக்கள் வீதிகளிலேயே வீசப்பட்ட நிலையில் கிடப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் வீதிகளில் கண்ணீருடன் நிர்க்கதி நிலையில் உள்ளனர். முஸ்லிம் மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த அடாவடித்தனத்தால் 40 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் இருந்த மக்களின் வீடுகளே இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.

இச்சம்பவத்தால் கொழும்பு கொம்பனி வீதி பாதை ஊடான போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதுடன் தொடருந்து போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: