Friday, 18 July 2008

வெளிநாட்டுப் படைகள் இலங்கையின் பாதுகாப்பில் தலையிடாது- பொலிஸார்

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அந்தந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதும், சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பில் அவர்கள் தலையிட அனுமதிக்கப்படமாட்டார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சார்க் தலைவர்களின் சொந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மேல்மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்புப் பிரிவினர் தாம் பயன்படுத்தவிருக்கும் ஆயுதங்கள் குறித்து உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அனுமதியைப் பெற்ற பின்னரே தமது பணிகளை அவர்கள் முன்னெடுக்கமுடியும் என அவர் குறிப்பிட்டார். எனினும், எந்தவொரு வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளூர் பாதுகாப்பு விடயத்தில் தலையிட அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

சார்க் மாநாட்டுக்கான அனைத்துப் பாதுகாப்புக் குறித்தும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் திட்டங்களைத் தீட்டியிருப்பதாகவும், இதன் ஒரு கட்டமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டு, சந்தேகத்துக்கிடமானவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். சார்க் மாநாட்டுக்கான விசேட பாதுகாப்புத் திட்டங்களை அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் முதலேயே தயாரித்து விட்டதாகவும், மேல்மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சார்க் மாநாட்டை முன்னிட்டு நான்கு உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் உரிய முன்னனுமதி பெற்றுச் செல்லவேண்டுமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சார்க்கை முன்னிட்டு புறக்கோட்டை புகையிரத நிலையம் மூடப்படவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டபோதும், புகையிரதநிலையம் திறந்தே இருக்கும் எனவும், எனினும், அங்கு எந்தப் புகையிரதங்களும் செல்லாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

No comments: