Saturday, 5 July 2008

சார்க் மாநாட்டில் முஷாரப் கலந்துகொள்ளமாட்டார்

பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் போராட்டத்துக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கான அழைப்பிதழை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கடந்த வியாழக்கிழமை பர்வேஸ் முஷாரபிடம் கையளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நெருக்கமான உறவைச் சுட்டிக்காட்டியிருக்கும் பர்வேஸ் முஷாரப், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இருநாடுகளும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு சமாதானத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை வலுப்படுத்துவதாகவும், பிராந்தியத்தின் அபிவிருத்தி திட்டங்களை மேலும் முன்னேற்றுவதாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்திற்குள்ளும், பிராந்தியங்களுக்கிடையிலுமான நம்பிக்கையையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற 12 ஆவது சார்க் மாநாடு தெற்காசியாவின் திருப்பு முனையாக அமைந்திருந்ததாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் முகமட் ஷபீக்கின் கூற்றுப்படி, இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் முஷாரப் கலந்துகொள்ளமாட்டார் எனவும், பாகிஸ்தானின் புதிய பிரதமர் யூசுப் ரசா கிலானி தலைமையிலான குழுவினரே இலங்கை வரவுள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments: