Saturday, 5 July 2008

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை- கருணா அம்மான்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தன்மீது சுமத்தியிருக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை என்பதுடன், ஆதாரமற்றவை என பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில், இராணுவப் பிரிவுக்குப் பொறுப்பான தளபதியாகத் தான் இருந்த காலத்தில் பல்வேறு இராணுவத் தாக்குதல்களை நடத்தியிருந்ததுடன், பல இராணுவ வெற்றி தோல்விகளில் பங்கெடுத்திருந்ததாக பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்த கருணா, அந்த காலகட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும், கைதுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தான் பொறுப்பு அல்ல எனவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், பொட்டம்மானுமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் அற்றவை எனவும் கருணா கூறியுள்ளார். தனது பிள்ளைகளையும், மனைவியையும் பார்ப்பதற்காகவே பிரித்தானியா சென்றதாகவும், தற்பொழுது சட்டரீதியாகவே இலங்கை திரும்பியிருப்பதாகவும் அவர் பி.பி.சி. செய்திச்சேவைக்குக் கூறினார்.

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி பிரித்தானியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு அவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இலங்கை திரும்பியிருந்தார்.

போலியான கடவுச்சீட்டை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே தனக்குப் பெற்றுக்கொடுத்ததாக கருணா பிரித்தானிய நீதிமன்றத்தில் கூறியதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது பற்றி பி.பி.சி. அவருடைய கருத்தைக் கோரியபோது, இந்தத் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனப் பதிலளித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்கும் எண்ணம் எதுவும் இல்லையெனவும், மக்களுக்குச் செய்யவேண்டிய பணி அதிகமிருப்பதாலேயே நாடு திரும்பியதாகவும் கருணா கூறியிருந்தார். தன்னால் நியமிக்கப்பட்ட பிள்ளையான் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது வரவேற்கத் தக்கவிடயம் என பி.பி.சிக்குத் தெரிவித்த கருணா, தான் நாட்டில் இல்லாதிருந்தமை மற்றும் அவசரமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டமை போன்ற காரணங்களால் தமது கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கவில்லையெனவும் கூறினார்.

வழமையான ஜனநாயகக் கட்சிகளுக்கிடையில் காணப்படுவதைப்போன்று தமது கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தமது குழுவினர் ஆயுதங்களை வைத்திருந்தாலும் வடக்கில் இடம்பெறும் மோதல்களுடன் தொடர்புபடவில்லையெனவும் கருணா அம்மான் பி.பி.சி. செய்திச்சேவைக்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகத் தொடர்ந்தும் கருணா அம்மானே செயற்படுவார் என கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பியிருக்கும் கருணா அம்மானை சந்திப்பதற்கு தனக்கு நேரம் கிடைக்கவில்லையெனவும், விரைவில் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் எனவும் அவர் கூறினார். கட்சியின் உயர்மட்டக்குழு ஆராய்ந்த பின்னர் முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்குவதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments: