Saturday, 5 July 2008

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை புனரமைக்க ஈரானிய அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்கும்பொருட்டு ஈரானிய நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிலையத்தின் பிரதி முகாமையாளர் சிவில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.

நவீனமயப்படுத்தும் பணிகளுக்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் போதுமானதாக இல்லாமையினால் மேலும் 30 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக புதிய தாங்கிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் சிவில் சுதுவெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நவீனமயப்படுத்தும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் எண்ணெயின் விலை குறைவடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானிய அரசாங்கம் இலங்கையின் இயற்கை சக்தி வளத்துறையை அபிவிருத்தி செய்யும்பொருட்டு, 1.5 பில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம், உமாஓயா நீர்;ப்பாசனத்திட்டம் ஆகியவற்றைத் தொடக்கிவைத்திருந்ததன் தொடரிலேயே ஈரானிய அதிகாரிகள் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: