Wednesday, 9 July 2008

புலிகளின் வெளிநாட்டுப் பிரசாரங்களினால் சிறிலங்காத் தூதரகங்களின் செயற்பாடு படுதோல்வி: "டெய்லி நியூஸ்"


தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரசாரங்களினால் சிறிலங்காத் தூதரகங்களின் செயற்பாடு படுதோல்வியடைந்துள்ளது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஏரிக்கரைப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்" சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அந்த நாளேட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப் போவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுப்பதே முக்கிய இலக்கு என ஜாலிய விக்ரமசூரிய நேற்றைய நாள் வெளியான பிரதான செய்தியில் தெரிவித்திருந்தார்.

வழமையான இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தமது கடமைகளை வரையறுக்காது விரிவான அனைத்துலக விவகாரங்களுக்கு சிறிலங்காவின் வெளிநாட்டுத் தூதரகங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கும் பிரசார நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவின் வெளிநாட்டுத் தூதரங்களினால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராக சிறிலங்காத் தூதரகங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.

சில இராஜதந்திர அதிகாரிகள் வெறுமனே தமது குழந்தைகளுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பிப்பதனையும், சொகுசு வாழ்க்கை வாழ்வதிலும் மாத்திரம் அதிக முனைப்புக்காட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துலக சமூகத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நன்மதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கம் சில பிரபல ஊடகவியலாளர்களுக்கு தூதரக உயர்பதவிகளை வழங்கியிருந்தது.

எனினும், இந்த முயற்சிகள் எந்தளவிற்கு வெற்றியளித்தது என்பது கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

இந்த பாதகமான சூழ்நிலையின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் அசாதாரண வளர்ச்சியை எட்டியுள்ளது.

சில சிறிலங்காத் தூதுவர்களின் இயலாமையினால் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு சவால் விடுக்க முடியாதளவு வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலைமையினால் சிறிலங்காவின் வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்களது நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நுட்பமான இராஜதந்திர முன்நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்மூலம், சில வெளிநாட்டுத் தூதுவர்கள் சிறிலங்காவுக்காக ஆற்றிய அளப்பரிய சேவையை குறைத்து மதிப்பட முடியாது.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அதி சக்திவாய்ந்த பிரச்சார உத்திகளின் முன்னிலையில் இந்த சேவைகள் பலவீனமடைந்துள்ளன.

சில மேற்குலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பாதிக்கப்பட்ட தரப்பென பிழையாக விளங்கிக் கொண்டுள்ளமையும் புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல வருடங்களாகவே இந்த எண்ணக்கருவை தகர்த்து எறியக்கூடிய நிலைமை உருவாகவில்லை. தொழில்சார் ரீதியாக இந்தப் பிரச்சினை அணுகப்படாது விட்டால் தொடர்ச்சியாக நாம் தோல்விகளை சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.

சாதாரண இராஜதந்திர அதிகாரிகளிடம் காணப்படும் திறமைகளைவிட சிறப்புத் திறமைகள் இதற்கு தேவைப்படக்கூடும்.

இதனால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட சில அனுபவம் வாய்ந்த தூதரக அதிகாரிகள் நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இவர்கள் தொழில் ரீதியான நிபுணத்துவம் பெற்ற இராஜதந்திரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனினும், அண்மையில் இத்தாலிக்கான சிறிலங்காத் தூதுவர் வெளிக்காட்டியதனைப் போன்றதொரு சாணக்கியம் வெளிக்காட்டப்பட வேண்டும். குறிப்பாக விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களை இத்தாலியில் கைது செய்ய இந்தத்திறமை கைகொடுத்தது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுவர் அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரங்களையும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களையும் வழுவின்றி மேற்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

தகுதியில்லாதவர்களை இராஜதந்திரப் பணிகளில் அமர்த்துவதனால் நாட்டுக்கு எவ்வித பயனும் கிட்டாது.

அண்மையில் தூதரகம் ஒன்றில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் குடிபோதையில் இராஜதந்திர அதிகாரி குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்.

இந்த மாதிரியான செயற்பாடுகள் நாட்டின் நன்மதிப்பிற்கு எந்த வகையிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது.

இராஜதந்திர கட்டமைப்பில் அடிப்படை ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு இராஜதந்திர சேவை தொடர்பான மாணவர்களின் கற்கை நெறிகளிலும் சில மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: