Wednesday, 9 July 2008

புத்தளம் மாவட்டத்தில் கடத்தி, கப்பம் பெற்றுவந்த 6 பேரடங்கிய கோஷ்டி பொலிஸாரிடம் சிக்கியது


புத்தளம் மாவட்டம் முந்தல் பகுதியில் ஆட்கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதலில் ஈடுபட்டுவந்ததாகக் கருதப்படும் ஆறுபேர் கொண்ட கோஷ்டியொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆறுபேரும் வெள்ளை வானொன்றில் சென்று கொண்டு இருக்கையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையிலே வீதிச் சோதனை நிலையமொன்றில் வழிமறிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, வானினுள் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது விளையாட்டுப் பிஸ்ரல் ஒன்றும் கடற்படை அதிகாரிக்குரிய சீருடையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆறு பேரில் ஐவர் சிங்களவர்களென்றும் ஒருவர் தமிழரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் முந்தல் பகுதியில் அண்மைக் காலமாக ஆட்கடத்தல்களும் ஆட்கள் காணாமல் போதலும் அதிகரித்து வரும் நிலையில் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தக் கோஷ்டி தனது கைவரிசையைக் காட்டியுள்ளதா என்பது தொடர்பாகப் பொலிஸார் இவர்களைத் தீவிர விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

No comments: