தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வை முன்வைக்க முடியாவிட்டால் அவர்கள் பிரிந்து சென்று அவர்களின் உள்ளக சுயநிர்ணயத்தின்படி செயற்பட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் நேற்று (23) பாராளுமன்றத்தில் கூறினார்.
தனி நாட்டுக் கோரிக்கை என்பது புலிகளின் கோரிக்கை அல்ல என்றும் அது தமிழர்களின் கோரிக்கை என்றும் அவர் கூறினார்.
தமிழர்களின் சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்படுவதன் மூலமே தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச சமூகம் கூறுகின்றது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய வடக்கு – கிழக்கு நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்த வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது தமிழர்கள் பிரச்சினையைத் தீர்க்க எந்தவொரு பெரும்பான்மை இனத் தலைவர்களும் இதுவரை முயற்சிக்கவில்லை. 13வது அரசியல் திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பும் இந்த அரசின் தலையீட்டால் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.
சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாகவும் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட முயற்சிக்கப்படவில்லை. இதன் இறுதி முடிவில் ஜனாதிபதிதான் ஆதிக்கம் செலுத்துவார். சர்வதேச சமூகம் இது தொடர்பில் நல்லதொரு முடிவை எதிர்பார்க்கின்றது.
தமிழர்களுக்கு உரித்தான சுயநிர்ணயம் வழங்கப்பட வேண்டுமென்றே சர்வதேச சமூகம் கூறுகின்றது. உரிய முறையிலான அதிகாரப் பகிர்வையே சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. அதன் மூலம் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்ää அவர்களுக்கு சுயநிர்ணயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்நாடுகள் கூறுகின்றன என்றார்.

No comments:
Post a Comment