அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் புதிதாக முகாம் நிறுவிக்கொண்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சுமார் 40 நிமிட நேரம் நீடித்ததாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலை அடுத்து, அப்பகுதியில் முகாம் அமைக்கும் பணிகளை இடையிலேயே கைவிட்டு விட்டு படையினர் தப்பியோடியுள்ளனர்.
இதன் பின்னர், கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி சிறப்பு அதிரடிப்படையினர் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினருக்கு ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தெரியவரவில்லை. தமது தரப்பில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
இம் மாதம் முதலாம் நாள் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியிலிருந்து, சிறிலங்கா அரசு தலைவர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment