Wednesday, 2 July 2008

''இனிமேலும் பொறுக்க முடியாது!''; ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக செயற்பாட்டு பதில் முகாமையாளருமான நாமல் பெரேரா தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் முன்னணி ஊடக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்கள் என்பன இணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடாத்தின.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஊடக செயற்பாட்டாளர்களும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஐந்து முன்னணி ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி, இடதுசாரி முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சிவில் சமூக நிறுவனங்களும் கலந்து கொண்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்ததுடன், பெருமளவிலான பொலிசாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

"நாமலைத் தாக்கியதன் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்து, புதிய பொலிஸ்மா அதிபரின் முதல்பணி குண்டர்களைக் கண்டுபிடிப்பதே, அமைச்சரவை உப குழுவுக்கு குண்டர்களைக் கண்டுபிடிக்க முடியாதா" எனும் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் ஏந்தியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, மஹ்ரூப், தயாசிறி ஜெயசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரோசி சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தனர்.

அத்துடன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், தேசிய சமாதானப் பேரவை, பிரயத்ன மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் வரையறையின்றித் தொடர்வதாகவும் அது குறித்து அரசாங்கம் பாராமுகமாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன், தொடர்ந்தும் அரசாங்கம் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கவனம்செலுத்தத் தவறுமானால் பொதுமக்களையும் இணைத்துக் கொண்டு இப்போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமும் பொலிஸ் அதிகாரிகளும் பொறுப்பற்றவிதமான கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டினார். அத்துடன் புதிதாகப் பதவியேற்ற பொலிஸ்மா அதிபர், இதுதொடர்பில் வெளியிட்ட கருத்துக்களும் பொறுப்பற்றவிதமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், கருத்துத் தெரிவித்த சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய, தொடரும் ஊடகவியலாளர்களுக்கெதிரான வன்முறைகளைப் பொறுக்கமுடியாமலேயே ஜனாதிபதியைத் தேடி அவரது காரியாலயத்துக்கு அருகில் வந்துள்ளதாகவும், நாமல் பெரேராவைத் தாக்கியவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியது பொலிசாரினதும், ஜனாதிபதியினதும் கடமை எனவும் குறிப்பிட்டார்.

No comments: