Monday, 21 July 2008

சார்க் பெயரால் ஏழைகளின் வீடுகள் அழிக்கப்பட்டமை வெட்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும் - பாகிஸ்தான் தொழில்கட்சியின் பேச்சாளர் குற்றச்சாட்டு

சார்க் மாநாட்டின் பெயரால் கொழும்பிலுள்ள ஏழை மக்களின் வீடுகளை அழித்தமை இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் கொள்கைக்கும் வெட்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என தெற்காசிய மக்கள் அரங்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் தொழில் கட்சியின் பேச்சாளர் பாரூக் தாரிக் குற்றம் சாட்டினார்.


இவ்விடயத்தை தெற்காசிய மக்களின் பிரதிநிதிகளான தாம் உலகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கொழும்பு கொம்பனி வீதியில் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி உடைத்து அழிக்கப்பட்ட பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

சார்க் நாடுகளின் பிரதிநிதிகளான நாங்கள் எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவே இலங்கைக்கு வந்துள்ளோம். இந்த நிலையில், சார்க் மாநாட்டின் பெயரால் கொழும்பிலுள்ள ஏழை மக்களின் குடியிருப்புக்கள் அரசாங்கத்தால் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன.

இது இலங்கை மக்களைக் கேவலப்படுத்தும் செயற்பாடாகும். இம்மக்களுக்கு உடனடியாக தற்காலிக தங்குமிட வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும். அத்தோடு, இம்மக்களுக்கு நஷ்டஈடும், நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான உதவியும் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

சார்க் மாநாட்டின் பெயரால் அரசியல்வாதிகள் தமது நலன்களுக்காக ஏழை மக்களின் வீடுகளை உடைத்து அழித்தமை இலங்கை அரசாங்கத்துக்கும்,


அதனது கொள்கைக்கும் வெட்கத்தை ஏற்படுத்தும் செயலாகும். இந்த மோசமான நடவடிக்கையை தெற்காசிய மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.

No comments: